Delhi gangrape convicts hanged: டெல்லி கூட்டு பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் டெல்லி டிடியு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதன்பின், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
2012 டிசம்பர் 16ம் தேதி, தலைநகர் டெல்லியில், இளம்பெண் ஒருவர் முகேஷ் சிங், அக்ஷய் சிங் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா உள்ளிட்டோர் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்தது மட்டுமல்லாமல், கொடூரமாக தாக்கினர். பல்வேறு சிகிச்சைகளுக்கு பிறகும் அப்பெண் மரணமடைந்தார்.
டெல்லி கூட்டு பாலியல் துன்புறுத்தல் வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் சிங், அக்ஷய் சிங் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா உள்ளிட்டோருக்கு டெல்லி திகார் சிறையின் எண் 3ல், 20ம் தேதி காலை 5.30 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக டெல்லி சிறைத்துறை டிஜி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.
சந்தீப் கோயல் மேலும் கூறியதாவது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து சிறை வளாக பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு மக்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றவாளிகளின் உடல்கள், தூக்கு கயிற்றில் 30 நிமிடங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. டாக்டர்கள் அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை உறுதி செய்தபின்னரே, அவர்களின் உடல்கள் இறக்கப்பட்டன.
இவர்களின் உடல்கள், டெல்லி தீனதயாள் உபத்யாய் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ளன. இந்த பரிசோதனைக்கு பிறகு, அவர்களின் உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா தேவி கூறியதாவது, என்னுடைய மகளை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது மகளை காப்பாற்ற முடியாமல் போனதற்கு இதுவரை வருந்திக்கொண்டிருந்தேன். என் மகள் இன்று மட்டும் உயிருடன் இருந்திருந்தால், ஒரு டாக்டரின் தாய் என்ற பெயர் தனக்கு கிடைத்திருக்கும்.
நீதி கிடைப்பது காலதாமதம் ஆனபோதிலும் தற்போது கிடைத்திருக்கிறது. இதற்காக நீதித்துறை, ஜனாதிபதி மற்றும் நமது அரசுகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள இளம்பெண் அல்லது சிறு குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவம் நிகழும்பட்சத்தில், முதலில் அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். என்னுடைய மகள் பாதிக்கப்பட்டதை போன்று, நாட்டில் எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நாம் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
கடைசி நேர திக் திக்
குற்றவாளிகளின் கருணை மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஏ பி சிங், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் மற்றும் போபண்ணா பெஞ்ச், 20ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் விசாரித்தது. அதிகாலை 3.30 மணியளவில், இந்த மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகள் பவன் மற்றும் அக்ஷய், தங்களது குடும்பத்தினரை சந்திக்க கோரிக்கை விடுத்ததாக சோலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா தெரிவித்தார். ஆனால் சிறை விதிமுறைகளின்படி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
2012, டிசம்பர் 16ம் தேதி, தலைநகர் டெல்லியில், 23 வயது பிசியோதெரபி படிக்கும் மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால், பஸ்சில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த பெண், சிங்கப்பூர் மருத்துவமனையில், 13 நாட்களுக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு கோரி, தேசிய அளவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
குற்ளவாளிகள் 6 பேரில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், அவர் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான ராம் சிங், 2013ம் ஆண்டு திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
2017ம் ஆண்டு மே மாதம், 4 குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3 முறை மரண தண்டனை நிறைவேற்ற 3முறை நாட்கள் குறிக்கப்பட்டு சட்ட சிக்கல்களால், அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்ந்து தடைபட்டு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையை, மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்காமல், இதற்கென்று தனியான நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கோரிக்கை விடுத்திருந்தார்.
2001 நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு, 2013ம் ஆண்டில் திகார் சிறையில் மரண தணடனை நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், திகார் சிறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநேரத்தில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பவன் ஜலாட், கடந்த 17ம் தேதி வரவழைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொருவரின் தண்டனை நிறைவேற்றத்திற்கும் ஜலாட்டிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தூக்கு கயிறுகள், பீகார் மாநிலம் பக்ஸார் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தன. ஜலாட், மரண தண்டனை நிறைவேற்ற சோதனையை, டம்மிகளை வைத்து பலமுறை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil