Delhi HC Bar Association condemns Jagan letter to CJI : ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி,உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் அடுத்த தலைமை நீதிபதிக்கான பட்டியலில் இருக்கும் என்.வி. ரமணா மீது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எழுதிய கடிதம் கண்டனத்திற்குரியது என்று டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்தது.
இது நீதித்துறையை அச்சுறுத்தும் செயல் என்றும், நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானது என்றும் அது தெரிவித்தது.
ஆந்திர முதல்வரின் முதன்மை ஆலோசகர் அஜய கல்லம் வெளியிட்ட கடிதத்தில்," நீதிபதி ரமணா, ஆந்திர உயர்நீதிமன்ற அமர்வுகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறார். உயர்நீதிமன்ற வழக்குகளை ஒதுக்கீடு (ரோஸ்டர்) செய்வதிலும் அவரின் செல்வாக்கு காணப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும்,"நீதிபதி ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், அமராவதியில் உள்ள நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களோடு தொடர்புடைய "கேள்விக்குரிய நில பரிவர்த்தனைகள்" குறித்து ஊழல் தடுப்பு பணியகம் விசாரித்து வருவதாகவும்" கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
"தெலுங்கு தேசம் கட்சிக்கு தொடர்பான சில முக்கிய வழக்குகள் அனைத்தும் சில குறிப்பிட நீதிபதிகளுக்கு மட்டும் ஒடுக்கப்படுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி ரமணா தலைமையிலான ஒரு அமர்வு, பதவியில் இருக்கும்/ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிப்பது தொடர்பான வழக்கினை விசாரித்து வந்த சூழலில் தான், ஜெகன் மோகன் ரெட்டி இக்கடிதத்தை வெளியிட்டார்.
இன்னும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஜெகன்மோகனுக்கு எதிராக இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கினை அக்டோபர் 9ம் தேதி தான் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் துவங்கியது. அதற்கு அடுத்த நாளே முதல்வரின் முதன்மை ஆலோசகர் அஜெய கல்லம் முதல்வரின் கடிதத்தை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் ஒப்படைத்திருக்கிறார்.