டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் புது டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, முதல்கட்ட விசாரணை நடத்துமாறு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய்-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா பதில் கடிதம் எழுதி உள்ளார்.
தனது கடிதத்தில் நீதிபதி வர்மா கூறியிருப்பதாவது: "அந்த பணம் குறித்து எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்தப் பணத்துடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. துரதிருஷ்டவசமாக அன்றைய இரவில் எடுத்ததாகக் கூறப்படும் பணம் எனது உறவினர்களிடமோ, பணியாளர்களிடமோ காட்டப்படவில்லை.
எனது வீட்டின் பொருள்கள் பாதுகாப்பு அறையில் இருந்து பண மூட்டை எடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டினை நான் கடுமையாக மறுக்கிறேன், முற்றிலும் நிராகரிக்கிறேன். எந்த எரிந்து போன பண முட்டைகளை யாரும் எங்களுக்கு காட்டவோ, எங்களிடம் ஒப்படைக்கவோ இல்லை. உண்மையில் அன்று இரவில் அகற்ற முயன்ற எரிந்த குப்பைகளில் ஒரு பகுதி இன்னும் என் வீட்டில்தான் உள்ளது.
மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் எனது இல்லத்தின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பொருள்கள் பாதுகாப்பு அறையில் தீ பிடித்துள்ளது. அந்த அறையில் யாரும் பயன்படுத்தாத பொருள்கள் போட்டுவைத்திருப்போம். எப்போது திறந்தே கிடக்கும் அந்த அறைக்கு முன்வாசல் கதவு மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் பின்கதவு என 2வழியாகவும் செல்லலாம். அது பிரதான வீட்டின் ஒரு பகுதியாகவோ அல்லது ஊடகங்களில் சொல்லப்பட்டது போல எனது வீட்டின் ஒரு பகுதியாகவோ இல்லை.
தீ விபத்து நடந்த அன்று நானும் எனது மனைவியும் வீட்டில் இல்லை. மத்தியப்பிரதேசத்துக்குச் சென்றிருந்தோம். எனது மகளும் வயாதான தாயரும் மட்டுமே வீட்டில் இருந்தனர். 15ம் தேதி மாலையில்தான் நானும் எனது மனைவியும் டெல்லி திரும்பினோம். தீயை அணைக்கும் பணியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டு அவர்கள் மீண்டும் அங்கு வந்தபோது எந்தப் பணத்தையும் அவர்கள் பார்க்கவில்லை.
பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்தப் பணத்தையும் வைக்கவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். அங்கிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நானோ எனது குடும்பத்தினரோ பணத்தை அங்கு பதுக்கி வைத்திருந்தோம் எனக் கூறுவது முற்றிலும் அபத்தமானது.
அந்த பொருள்கள் பாதுகாப்பு அறை எனது வசிப்பிடத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து ஒரு சுற்றுச்சுவர் அதனை பிரிக்கிறது. என் மீது அவதூறுக் குற்றச்சாட்டினை சுமத்துவதற்கு முன்பு ஊடகங்கள் குறைந்தபட்சம் அதுகுறித்து என்னிடம் விசாரித்திருக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி வர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரிய வந்ததாக நீதிபதி வர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் "தன் மீது பொய் வழக்குப்பதிந்து அவதூறு பரப்புவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்றும், என் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெறும் மறைமுகமான குற்றச்சாட்டுகளே என்றும் வர்மா கூறினார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த 6 மாத போன் பதிவுகளை தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.