முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராஜா, தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் பலர் 2017-ல் விடுவிக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முழு ஆதாரங்களையும் மறுமதிப்பீடு செய்வதற்கு சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி) தெரிவித்தது.
இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், டிசம்பர் 21, 2017-ல் தீர்ப்பு வழங்கியது. அதில் இந்த வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சி.பி.ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், 2ஜி வழக்கில் இருந்து முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராஜா, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும், வரும் மே மாதத்தில் இருந்து இந்த வழக்கின் மீதான விசாரணை தொடங்கும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா, “இந்த பதிவில் உள்ள விஷயங்களின் அடிப்படையில், சாட்சியங்களை ஆய்வு செய்த பிறகு... முதன்மையான பார்வையில் ஒரு வழக்கு உள்ளது என்பதில் ஒரு புறநிலை திருப்தி அடைந்துள்ளது, அதற்கு ஆழமான ஆய்வு மற்றும் முழு ஆதாரங்களையும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவோ, சாட்சியங்கள் விசாரணையோ நடக்காது. ஏற்கனவே, இந்த வழக்கின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவிட்டன.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா நீலகீ தனி தொகுதியிலும், கனிமொழி எம்.பி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
இந்த சூழலில்தான், 2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிடோருக்கு எதிராக சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“