டெல்லி உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி, அசோகா ஐந்து நட்சத்திர விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகள், அவர்களது குடும்பங்களுக்காக 100 அறைகளை ஒதுக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் சாணக்யாபுரியில் உள்ள ப்ரைமஸ் மருத்துவமனை ஒப்பந்தம் போட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவை சாணக்யாபுரி துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கீதா க்ரோவர் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றினார்..
தேசிய தலைநகரில் கோவிட் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை படுக்கைகளை பெறுவதற்கு போராடுகின்றனர். கோவிட் நெருக்கடி தொடர்பான மனுக்களை விசாரிக்கும் போது உயர்நீதிமன்றமே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசை விமர்சித்துள்ளது.
ஏப்ரல் 22 அன்று, மருத்துவமனை படுக்கைகள் பிரச்சினையை கையாளும் போது, நீதிபதி விபின் சங்கி “கொரோனா பாதிப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மக்களுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை. சாலையில் உள்ள சாதாரண மனிதனை விடுங்கள். எனக்கு ஒரு படுக்கை தேவைப்பட்டாலும் என்னால் அதை எளிதாக பெற முடியாது என கூறினார். திங்களன்று, டெல்லியில் கொரோனா பாதிப்பு 20,201ஆகவும் , உயிரிழப்பு 380 ஆகவும் பதிவானது.
துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் கீதா குரோவர் உத்தரவுப் படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிற நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கோவிட் சிகிச்சைக்கான வசதிக்காக டெல்லி அசோகா நட்சத்திர விடுதி 100 அறைகளை ஒதுக்க வேண்டும். இதற்காக அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் சாணக்யாபுரியில் உள்ள ப்ரைமஸ் மருத்துவமனை ஒப்பந்தம் போட்டுள்ளது என கூறினார்.
இதுதொடர்பான தகவல்களை பெற டெல்லி உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல் மனோஜ் ஜெயினை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக க்ரோவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தினார். இந்த வசதி செயல்பட குறைந்தபட்சம் வார இறுதி வரை ஆகும். இது நீதிபதிகள், ஐகோர்ட் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது, ”என்று கூறினார்.
அசோகா ஹோட்டல் இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமானது. ஐ.டி.டி.சியை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கோவிட் நோயாளிகளின் படுக்கைகளை அதிகரிப்பதற்காக நகரத்தில் உள்ள 22 ஹோட்டல்கள் மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டன.இவை கட்டணங்களுக்கு உட்பட்டவை. கொரோனா அறிகுறிகள் கடுமையாக உள்ள நோயாளிகளை இங்கு அனுமதிக்க மாட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஆக்ஸிஜன் வசதி இருக்க வேண்டும்.
க்ரோவர் உத்தரவின்படி, ஹோட்டல் ஊழியர்களுக்கு கவச உடை வழங்கப்படும். கொரோனா நோயாளிகளை அணுகுவது தொடர்பாக அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.நோயாளிகளுக்கான தேவையான அறைகள், பராமரிப்பு, அறைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் உணவு உட்பட அனைத்து சேவைகளும் ஹோட்டல் மூலம் வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை மருத்துவமனையிடமிருந்து ஹோட்டல்கள் பெற்றுக்கொள்ளலாம். ஹோட்டல் அறைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியை மருத்துவமனை ஏற்றுக்கொள்ளும்.
பிரைமஸ் மருத்துவமனை தங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை தங்களது சொந்த செலவில் ஹோட்டலில் தங்கவைத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டண விவரங்களை ஹோட்டலுடன் கலந்துபேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட மற்ற ஹோட்டல்களில், மருத்துவமனை ஒரு நாளைக்கு ஒரு நோயாளிக்கு நுகர்பொருட்கள், மருத்துவர் சேவை, செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்கள் முதலியவற்றுக்காக ரூ.5000க்கு மேல் வழங்காது.
ஆக்ஸிஜன் சப்போர்ட்டுக்காக இணைக்கப்பட்ட மருத்துவமனை ஹோட்டலில் ஒரு நாளைக்கு ரூ .2,000 வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. மருத்துவமனையால் வழங்கப்படும் மருத்துவ சேவைகளுக்கு முறையே நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என முந்தைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அசோகா ஹோட்டலிலும் இதே முறைதான் பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.