காஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார். இதனையொட்டி, பாஜக-வை சேர்ந்த 9 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்துவா பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த அடையாளங்களை வெளிப்படுத்தினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.