12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பாக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் ஒப்புதல் பெற்று அமலுக்குக் கொண்டு வந்தனர்.
இது குறித்து மத்திய அரசிடம் தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதையும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றியும் மத்திய அரசு சிந்திக்கவில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்கார குற்றத்தை பொறுத்தவரை பெரும்பாலான வழக்குகளில் அந்தச் சிறுமியின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்கள் தான் இந்தக் குற்றத்தை செய்கிறார்கள்.
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதைப் பொறுத்தவரை மத்திய அரசு விஞ்ஞான ரீதியாக ஏதாவது ஆய்வு நடத்தினீர்களா?... இதனால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஏற்படும் விளைவுகளைச் சிந்தித்து பார்த்தீர்களா?... 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கற்பழித்து கொலை செய்வதற்கும், கற்பழிப்பதற்கும் ஒரே தண்டனையாக மரண தண்டனை அளிக்க வேண்டுமென்றால், அந்தச் சிறுமியை குற்றவாளிகள் உயிருடன் விட நினைப்பார்களா? என்பது பற்றி நீங்கள் யோசித்தீர்களா?” என்ற கேள்விகளை நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டது.
இதனால் இந்த வழக்கில் மேற்கொண்டு என்ன நடக்கும் என்ற சிந்தனைகளும் இந்திய மக்களிடையே பறவி வருகிறது.