மதுபான கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, டெல்லி ஆம் ஆத்மி அரசின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 21-ந் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வரே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையால், கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சிறையில் வைப்பதன் மூலம் அவரது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருபவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.
இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், பணமோசடி குற்றச்சாட்டில் கது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் அதனை பொருட்படுத்தாமல், அவரை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் கூறியிருந்தார்.
மேலும் கெஜ்ரிவால் வேண்டுமென்றே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், கூறிய நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது, மேலும், கெஜ்ரிவாலை கைது செய்ய மத்திய அரசிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. டெல்லியில் மதுபான கொள்கை திட்டத்தை உருவாக்கியதில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், "டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை; இந்த தீர்ப்பை ஆய்வு செய்து, அதன்பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்படும்" ஆம் ஆத்மி வட்டாரங்கள் இந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“