டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் துறையின் முன்னாள் அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அப்போது, அதிகாரியால் கற்பழிப்பு மற்றும் குற்றவியல் மிரட்டல் போன்ற அனைத்து சம்பவங்களையும் மைனர் சிறுமி விவரித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி பிரேம் உதய் காக்கா ஆவார்.
இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில், பிரேம் உதய் காக்கா டெல்லி அரசுக்கு குறிப்பாக முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த நிலையில், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக பிரேம் உதய் காக்காவின் மனைவியையும் போலீசார் கைதுசெய்தனர்.
2020 மற்றும் 2021 க்கு இடையில் அதிகாரியால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, டெல்லி அரசு அதிகாரி பிரேம் உதய் காக்கா மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது பாலியல் வன்புணர்வு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்துள்ளனர்.
மேலும், பிரேம் உதய் காக்காவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைத்தார் என அவரது மனைவி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“