தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில், போலீஸாரை நைஜீரியர்கள் கூட்டமாக சுற்றி வளைத்து கைகளால் தாக்கியதுடன், அவர்களைக் கைது செய்ய விடாமல் தடுத்து அங்கே இருந்து வெளியேறும்படி வற்புறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காவல்துறை குழுவினரை சுற்றி வளைத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மூன்று நைஜீரியர்களின் விசா முடிவடைந்ததைத் தொடர்ந்து, மூன்று நைஜீரியர்களைக் கைது செய்ய காவல்துறையினர் குழு முயற்சி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால், அங்கே இருந்த நைஜீரியர்கள் மற்றும் அப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஆண்கள் போலீசாரைத் தாக்கினர். இதனால், போலீசாரால் கைது செய்து வைக்கப்பட்டிருந்த 3 பேர் தப்பித்தனர்.
நாட்டில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்த 3 நைஜீரியர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை முடிக்க போதைப்பொருள் தடுப்புக் குழுவை சனிக்கிழமை அனுப்பியதாக போலீஸார் தெரிவித்தனர். மதியம் 2.30 மணியளவில், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அப்போது, அங்கே இருந்த மற்றவர்கள் போலீஸாரை தடுத்துள்ளனர்.
துணை காவல் கண்காணிப்பாளர் (டெல்லி தெற்கு)சந்தன் சவுத்ரி கூறுகையில், “போலீஸ் குழு அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால், திடீரென்று சுமார் 100 ஆப்பிரிக்கர்கள் அங்கு கூடி போலீஸ் குழுவைத் தடுத்தனர். இதற்கிடையில், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தப்பியோடினர். பின்னர் ஒருவர் வெற்றிகரமாகப் பிடிபட்டார்.
போலீஸார் அவர்களை கைது செய்தபோது, அந்த கும்பல் போலீஸாரை கைகளால் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களை அங்கே இருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை 6.30 மணியளவில் விசா காலம் முடிவடைந்த பிறகும் தங்கிருந்த நான்கு பேரை கைது செய்வதற்காக போலீசார் மீண்டும் அப்பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை மீண்டும் அப்பகுதியில் 100-150 பேர் சுற்றி வளைத்து கைது செய்ய விடாமல் தடுத்தனர்.
அந்த இடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று காவல்துறையினருடன் மோதுவதைக் காட்டுகிறது. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் இழுத்துச் செல்வதையும், ஆப்பிரிக்க இளைஞர்கள் அவர்களைத் தள்ளிவிட்டுக் கூச்சலிடுவதையும் பார்க்க முடிகிறது. அதிகாரிகள் மனிதச் சங்கிலியை உருவாக்க முயற்சிப்பதும், போராட்டக்காரர்களை தங்கள் லத்திகளைப் பயன்படுத்தி தடுக்க முயற்சிப்பதும் தெரிகிறது.
“சுமார் 150-200 ஆப்பிரிக்க மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை தப்பிச் செல்ல உதவ முயற்சி செய்தனர். ஆனால், போலீஸ் குழு அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றது” என்று டி.சி.பி கூறினார்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பியோடினர். தாக்குதல் நடத்திய கும்பல் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“