புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியில் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.
இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் குடியரசு தின விழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணி ஒன்றை விவசாயிகள் நடத்தினர். அதில் நாடு முழுவதும் இருந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாய சங்கங்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே போலீசார் தடியடி மூலமும், கண்ணீர் புகை குண்டுகள் மூலமும் விவசாயிகளை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தின் போது போலீசார் தரப்பில் சிலரும், விவசாயிகள் தரப்பில் பலரும் காயமடைந்தனர். அதோடு டிராக்டரில் பேரணியாக வந்த ஒருவர் அங்கிருந்த தடுப்பு வேலியில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்நிலையில் குடியரசு தின விழா அன்று நடந்த சம்பவத்திற்காக விவசாய சங்கங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு போராடும் திட்டத்தில் இருந்து சில விவசாய சங்கங்ககள் பின் வாங்கியுள்ளன. போராட்ட களத்தில் இருந்த முக்கிய விவசாய சங்கங்களான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, பி.கே.யு (பானு) மற்றும் ராஷ்டிரிய கிசன் மஜ்தூர் சங்கதன் போன்றவை நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்த உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளன.
"நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடும் திட்டத்தில் இருந்து விலகி உள்ளோம். ஆனால் ஜனவரி 30 அன்று உண்ணாவிரத போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நாடு முழுவதும் நடைபெறும்" என்று கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.
'நடிகரம் -ஆர்வலருமான தீப் சித்து என்பவர் தான் சீக்கியர்களின் மதக் கொடியான நிஷன் சாஹிபை செங்கோட்டையில் ஏற்ற பின்புலத்தில் இருந்து செயல்பட்டவர். அதோடு குடியரசு தின விழா அன்று அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை, அரசின் கை கூலியாக செயல்பட்டு சதித் திட்டம் தீட்டி வன்முறையை தூண்டி விட்டவர்' என விவசாய சங்கங்கள் குற்றம் சாற்றுகின்றனர். இந்த சம்பவத்திற்காக வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து பி.கே.யுவின் (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறியபோது,"90 % விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்ந்திருந்தார். ஆனால் கிசான் சங்கர்ஷ் மஜ்தூர் குழுவிற்கு மட்டும் தனி பாதை அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவினர் சென்ற பாதையில் மட்டும் குறைவான தடுப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன. அந்த குழு தான் போராட்ட களத்தில் முன்பகுதியில் இருந்தவர்கள்" என்று கூறுகின்றார்.
"இந்த வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு மோர்ச்சா தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது" என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர் சத்னம் சிங் பன்னு, 'செங்கோட்டையில் நடந்த சம்பவத்தில் தனது குழுவுக்கு எந்த பங்கும் கிடையாது' என்று கூறி மறுத்துள்ளார்.
"செங்கோட்டையையோ அல்லது ஐ.டி.ஓ.-வையோ முற்றுகையிட நங்கள் யாரிடமும் கூறவில்லை. அந்த நடிகர் (தீப் சித்து) தான் கூறினார். அதற்கு எங்கள் குழுவில் உள்ள சிலர் ஆதரவு தெரிவித்து, அந்த நபர் கூறியதை செய்தனர். மோர்ச்சா விவசாய சங்கங்கள் மீதும் விவசாயிகள் மீதும் எங்களுக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது. எனவே விவசாய சங்கங்களுக்குள் பிளவு ஏற்படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் டெல்லியின் காசிப்பூர் மற்றும் சில்லா எல்லைகளில் போராடிய விவசாய சங்கங்கள் குடியரசு தின விழா அன்று நடந்த சம்பவத்தால் போராட்ட களத்தில் இருந்து பின் வாங்குவதாக கூறியிருக்கின்றன.
"இந்த போராட்டத்தில் உயிரை இழப்பதற்காவோ அல்லது உதைபடுவதற்கோ வரவில்லை. வேளாண் சட்டத்தை நீக்கவதற்கு வலியுறுத்தி அமைதியான முறையிலே போராட வந்தோம். ஆனால் சில குழுக்கள் போராட்டத்தின் போது மாற்று திசையில் சென்றுள்ளனர்" என்று ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கத்தின் தலைவர் வி.எம்.சிங் கூறியுள்ளார்.
"நேற்று முன்தின நிகழ்வுகளுக்கு மிகவும் வருத்தப்படுவதோடு, வெட்கப்படுகிறேன். 58 நாட்களாக போராடி வந்த இந்த போராட்டத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்ள உள்ளோம்" என்று பி.கே.யுவின் (பானு) தலைவர் பானு பிரதாப் சிங் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.