Delhi Republic Day parade Tamil News: இந்திய நாட்டின் 73-வது குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி (நாளை மறுநாள்) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன.
இது தொடர்பாக நேற்று பேசிய டெல்லி பகுதியின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலோக் கக்கர், “இந்திய ராணுவம், ஜனவரி 15 அன்று, அதன் சமீபத்திய போர் சீருடையை வெளியிட்டது. இந்த சீருடைகள் 12 லட்சம் படை வீரர்களுக்கு படிப்படியாகக் கிடைக்கும். மேலும், இந்த புதிய சீருடை, உருமறைப்பு முறை மற்றும் வடிவமைப்பு தொடர்பான மாற்றங்கள் மற்றும் புதிய பொருளால் ஆனது.
இதற்கு முன், 2008ல் ராணுவம் தனது சீருடையை மாற்றியது. அணிவகுப்பில் ஒவ்வொரு ராணுவக் குழுவும் 1950-களில் இருந்து துருப்புக்கள் பயன்படுத்திய சீருடைகள் மற்றும் ஆயுதங்களைக் காண்பிக்க உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்க உள்ள நிலையில், ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்களும், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இருந்து தலா ஒரு குழுவும், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 4 குழுக்களும், தேசிய மாணவர் படையை (NCC) சேர்ந்த 2 குழுக்களும், டெல்லி காவல்துறையிலிருந்து ஒன்றும், தேசிய சேவை திட்டத்தில் (NSS) இருந்து ஒன்றும் இடம்பெறுகின்றன.
ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன. தற்போது நாடுமுழுதும் கொரோனா தொற்று அச்சம் நிலவி வருவதால், ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதிலாக 96 பேர் மட்டும் இடம் பெறுகிறார்கள்.
ராஜ்புத் ரெஜிமெண்ட்டை சேர்ந்த முதல் குழு, 1950-களில் இருந்த ராணுவ சீருடையை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. அசாம் ரெஜிமெண்டை சேர்ந்த 2-வது குழு, 1960-களில் இருந்த சீருடை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது.
இதேபோல், சீக்கிய லைட் காலாட்படை மற்றும் ராணுவ ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த நான்காவது மற்றும் ஐந்தாவது குழுக்கள் தற்போதைய ராணுவ சீருடையை (2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது) அணிந்து 5.56 மிமீ INSAS துப்பாக்கியுடன் பங்கேற்கின்றன.
பாராசூட் ரெஜிமெண்டை சேர்ந்த 6-வது குழு, இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை அணிந்து பங்கேற்கிறது. டவோர் ரக துப்பாக்கியையும் பயன்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“