ஒரு வீடியோ கிளிப்பில் தரையில் காயமடைந்து கிடந்த 24 வயது இளைஞர் மற்றும் நான்கு நபர்களை தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடுமாறு வலியுறுத்திய நிலையில், அந்த இளைஞர் தற்போது இறந்திருக்கிறார்.
Advertisment
இந்த வீடியோ செவ்வாய்க்கிழமை பரவத் தொடங்கியது, கிளிப்பில் காணப்பட்ட மற்ற இரண்டு பேரின் குடும்பங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "திங்கட்கிழமை மாலை கர்தம் பூரியில் பகுதியில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது போலீசார் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற கொண்டிருந்தனர்" என்றனர்.
கர்தம் பூரியில் வசிக்கும் ஃபைசான் என்பவர் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பலியானார். மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் கிஷோர் சிங் கூறுகையில், "அவர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை இறந்தார். அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகி மோசமான நிலையில் இருந்தார்" என்றார்.
வீடியோ கிளிப்பில் அவர் ஒருவரும் இருப்பதை பைசனின் தாய் மற்றும் சகோதரிகள் உறுதிப்படுத்தினர்.
டி.சி.பி (வடகிழக்கு) வேத் பிரகாஷ் சூர்யா, "டெல்லி காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது" என்றார்.
வீடியோவில் காணப்படும் கசர் அலியின் (46) மகன் தாரிக் அலி (22) கூறுகையில், "திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் ஒருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, எனது தந்தை காயமடைந்து ஜிடிபி மருத்துவமனையில் இருக்கிறார் என்று. நான் பின்னர் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பார்த்தேன்… என் தந்தை அதில் இருந்தார்" என்றார்.
கர்தம் பூரி குடியிருப்பாளரும், வீடியோவில் காணப்பட்டவருமான ரபீக்கின் (25) மாமா அஸ்லம் கான் கூறுகையில். “போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியபோது அவர் ஒரு மசூதிக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவர்கள் கலகக்காரர்கள் என்று போலீசார் நினைத்ததால் சிலர் பிடிபட்டனர்… திங்கள் மாலை தாமதமாக, அவர் ஜிடிபி மருத்துவமனையில் இருந்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது" என்றார்.
பைசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உள்ளது. வரும் நாட்களில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.