டெல்லியில் வெப்ப நிலை குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றதா?

டெல்லியில் தொடங்க இருக்கும் பருவ மழையினால் கோடை கால மணற்புயலினால் ஏற்பட்ட காற்றின் மாசு அளவு குறைய வாய்ப்பிருக்கின்றதா?

கோடை காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே அதிக அளவு வெப்பத்துடன் காணப்பட்டது டெல்லி. கடந்த மாதம் தொடர்ந்து பல நாட்களாக மணற்புயல் ஏற்பட்டு மொத்த டெல்லியையும் தூசிக் காடாக மாற்றிவிட்டுச் சென்றது. டெல்லி மற்றும் இதர வடமாநிலங்களின் புவியியல் அமைப்பு தொடர்ந்து பல்வேறு தூசிப்புயல்களை ஏற்படுத்துவது வழக்கம்.

இன்று காலை விழிக்கும் போதே மேக மூட்டத்துடன் கூடிய டெல்லியை கண்டு வியந்த டெல்லி மக்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம், இன்னும் இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எச்சரித்திருக்கின்றது.

ஏற்கனவே 32.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தொடங்கியிருக்கும் இன்று வெப்ப நிலை சுமார் 40 டிகிரியினைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று டெல்லியில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்ப அளவு 33.4 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச அளவு 40.5 ஆகும். வானிலையில் தொடர்ந்து மாற்றங்கள் காணப்படுவதால், இன்று மாலை இடியுடன் கூடிய மழையினையும் எதிர்பார்க்கலாம்.

இராஜஸ்தானில் இருந்து வீசும் புயல் காற்றின் காரணமாகவே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்று அதிக அளவு மாசடைந்து காணப்படும். இந்நிலையில் இராஜஸ்தானில் ஏற்படும் புயல்காற்றின் வீச்சு குறைந்திருப்பதால் டெல்லியில் காற்று மாசுபாடு ஓரளவிற்கு குறைந்து காணப்படுகின்றது.

இந்தியாவின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஜூன் 15 அன்று தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இன்னும் ஒருவாரத்திற்கு பின்பு தான் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தந்திருக்கின்றது. தமிழகம் மற்றும் கேரள மேற்குத்தொடர்ச்சி எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து கொண்டிருக்கின்றது. தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடகவில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close