டெல்லி குர்கான் பகுதியில், தங்கள் சாதியை மீறி வேறொரு ஆணை காதலித்து திருமணம் செய்த 22 வயது பெண்ணை, அவரது குடும்பத்தினரே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குர்கான் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
டெல்லி ஜாஜாரில் உள்ள சுர்ஹெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப், இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்சி மாணவி அஞ்சலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தீப் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த திருமணத்துக்கு அஞ்சலியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
பிறகு சந்தீப், அஞ்சலி இருவரும் செக்டார் 102 இல் உள்ள பிளாட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏசிபி (குற்றம்) வருண் தஹியா கூறுகையில், சந்தீப், தங்கள் பிளாட்டில் இருந்த அஞ்சலியை காணவில்லை என்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார், இந்த பிளாட்டில் அஞ்சலியின் சகோதரர் குணால் மற்றும் அவரது மனைவியும் இருந்துள்ளனர்.
அஞ்சலியைக் கொல்ல குடும்பத்தினர் திட்டம் தீட்டிய பிறகு குணால் அஞ்சலியுடன் தங்க அனுப்பப்பட்டார். வியாழக்கிழமை, சந்தீப் தனது சகோதரியின் வீட்டிற்கு திருவிழாவிற்குச் சென்றார். குணாலின் மனைவி வேலைக்குச் சென்றிருந்தபோது, அஞ்சலி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக குணால் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.
இதையடுத்து அஞ்சலியின் பெற்றோர், குல்தீப் (44) மற்றும் ரிங்கி (42), பிளாட்டுக்கு சென்றனர்... குணாலும் அங்கு வந்தார்... இருவரும் அஞ்சலியை பிடித்து வைத்திருந்த போது குல்தீப் அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
பின்னர் பிரேத பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணையைத் தவிர்ப்பதற்காக அவர்கள் ஜஜ்ஜரில் உள்ள அவர்களது கிராமத்துக்கு அஞ்சலியின் உடலை எடுத்துச் சென்று அங்கு எரித்துள்ளனர், என்று ஏசிபி கூறினார்.
சந்தீப் பிராமணர் மற்றும் அஞ்சலி ஜாத் இனத்தைச் சேர்ந்தவர்,
தங்களின் சம்மதம் இல்லாமல் மகள், வேறு சாதியைச் சேர்ந்த சந்தீப்பை திருமணம் செய்ததால் குல்தீப்பும் ரிங்கியும் அதிருப்தி அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பிளாட்டுக்கு சென்ற பெற்றோர், அஞ்சலியைக் கொன்றுவிட்டு, உடலை காரில் எடுத்துச் சென்று கிராமத்தில் எரித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குணாலின் மனைவியின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
வியாழன் அன்று, சந்தீப் தனது கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலியை டிசம்பர் 19, 2022 அன்று திருமணம் செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தெரிவித்தார். திருமணத்திற்குப் பிறகு, அவர் அவளுடன் நகரத்தில் வசித்து வந்தார்.
வியாழக்கிழமை, அவர் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்ற பிறகு, மதியம் 1 மணியளவில் ஒரு சக ஊழியர் அவரை அழைத்து, அஞ்சலி இறந்துவிட்டதாகவும், அவரது உறவினர்கள் சுர்ஹெட்டியில் இறுதிச் சடங்குகளைச் செய்வதாகவும் கூறினார். அவர் தனது குடியிருப்புக்கு விரைந்துச் சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
சந்தீப் அளித்த புகாரின் பேரில் கொலை, சாட்சியங்களை அழித்தது மற்றும் தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil