/indian-express-tamil/media/media_files/2025/06/01/e4QDOMKlT9K6ui8rDxQr.jpg)
டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி கேம்ப் இடிப்பு; தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி கேம்ப் பகுதியில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனத்தின் மூலம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால், வீடுகளை இழந்த மக்கள் குடும்பத்துடன் கதறி அழுதுவருகின்றனர். ஜங்க்புரா பகுதியில் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டி அமைந்துள்ளது மதராஸி கேம்ப். இங்கு தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். ஏழ்மையான தமிழர்களே இங்கு வசித்து வருகின்றனர்.
370 குடிசைவீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம் மதராசி கேம்ப் என்பது பராபுல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம், ஆக்கிரமிப்பு என குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றி உள்ள பகுதிகளில் மழைக்காலத்தில் கடுமையான நீர்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, DUSIBசட்டம் மற்றும் டெல்லிசேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015-ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்பொழுது, கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முகாம் பகுதியில் வசித்த 370 குடும்பங்களில் 215 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், அரசின் நடவடிக்கையால் மதராஸி முகாம் தமிழ்க் குடும்பங்கள் நிற்கதியாக நிற்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மதராஸி கேம்ப் பகுதியில் வசித்த 65 வயதான ஜான்கி மற்றும் 35 வயதாகும் அவரது மருமகள் சுமோதி ஆகியோர் தங்கள் வீட்டை புல்டோசரால் தரைமட்டமாக்கப்படுவதை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து கணவருடன் டெல்லிக்கு வந்த 50 ஆண்டுகளுக்கு பின் வீட்டிலிருந்து குடும்பத்தால் சேமிக்க முடிந்த அனைத்து உடமைகளையும் வெளியேற்றி அமர்ந்திருந்தார். சமையலறை பாத்திரங்கள், உடைகள், மெத்தைகள், படுக்கை விரிப்புகள், வாளி மற்றும் 2 நாற்காலிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. மதராஸி கேம்ப் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்ததற்கான காரணம் இப்போது அதன் அழிவுக்கு காரணமாக உள்ளது என்றார்.
"அதிகம் சம்பாதிப்பவர்கள் வேறு இடத்தை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், என் வீட்டில் நான் மாதத்திற்கு சுமார் 7,000-8,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறேன். நாங்கள் எப்படி வாடகை கொடுப்பது?" என்று கேட்கிறார் சுமோதி. "கடைசி வரை நாங்கள் இங்கேயே இருப்போம் என்று நினைத்திருந்தோம்" என்கிறார் செல்வி. டெல்லி தமிழ் கல்வி சங்க பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்து. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவின்படி, புது டெல்லி உள்ள “தமிழ்நாடு இல்ல” அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசு, “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது. மதராசி கேம்ப் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.