சபரிமலை கோயிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மாயம் ஆவதாக தொடர்ந்து வந்த புகார்களை தொடர்ந்து, இதுகுறித்த விரிவான அறிக்கை வழங்குமாறு, தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை சீசன் நேரத்தில் மட்டுமல்லாது, நடை திறக்கும் மற்ற காலங்களிலும், பக்தர்கள் காணிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளியை செலுத்தி வருகின்றனர். இந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பிலான பொருட்கள், ஆரன்முலா கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்படும். இந்த அறைகளிலிருந்து சமீபகாலமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மாயம் ஆவதாக புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மாநில தணிக்கை துறை, இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ஊடகங்களை சந்தித்த திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது, தங்கம் மாயம் என்ற செய்தியில் உண்மையில்லை. இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தங்கம் உள்ளிட்ட பொருட்களின் ஆவணங்கள் பராமரிப்பு குறித்து ஊழியர்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால், அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இந்த ஸ்டிராங் ரூம் பராமரிப்பில் துணை கணக்கு அதிகாரி பொறுப்பிலான அதிகாரிகள் பணியில் உள்ளனர். முறைகேடு இங்கு நடைபெற வாய்ப்பு இல்லை. விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கப்படும் என்று பத்மகுமார் கூறினார்.