திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, தேவஸ்தான நிர்வாகம் கம்புகளை கொடுத்து அனுப்பி வைக்கிறது.
உலகளவில் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று திருப்பதி கோவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலை கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் நேரடியாக திருப்பதி மலைக்கு பேருந்தில் செல்பவர்களை காட்டிலும், மலைப்பாதைகளில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லலாம்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு ஒரு குடும்பம் தலைப்பாதையில் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தபோது அந்த குடும்பத்திற்கு முன் வேகமாக படிக்கட்டுகளை ஏறிய 6 வயது சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்கி பலியானார். அந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுததிய நிலையில், வனத்துறையினர் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.
ஆனாலும் மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் மலைப்பாதைகளில் பார்த்தாக கூறியுள்ளனர். இதனால் மலைப்பாதையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், அச்சமடைந்து வரும் நிலையில், திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மலையேறும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 12 வயதுக்குட்பட சிறுவர்களுக்கு காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த சில தினங்களுக்கு செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான நிர்வாகி ஒருவர், இனிமேல மலையேறும் 100 பேர் கொண்ட பக்தர்கள் குழுவுக்கு ஒரு பாதுகாவலர் அனுப்பபடுவார் என்றும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி போன்ற மிருகங்கள் நடமாடும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் காவலுக்கு இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து மலைப்பாதைகளில் 500 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறியுள்ள தேவஸ்தான நிர்வாகம் தற்போது பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி வழங்கப்பட்டு வருவதும் குழந்தைகள் மலையேறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”