மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவி ராஜினாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
மகாராஷ்டிராவில் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், மும்பையில் அவசரமாக கூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக-சிவசேனா கூட்டணிக்கு மகாராஷ்டிரா ஒரு தெளிவான ஆணையை அளித்ததாகவும் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் 70 சதவீத இடங்களை வென்றதாகவும் கூறினார்.
பாஜக தேர்தலுக்கு முன்பு கூட்டணி கட்சியுடன் "50-50 அதிகாரப் பகிர்வு என்ற ஒப்பந்தத்துக்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்திய ஃபட்னாவிஸ் சிவசேனா அதிகாரப் பசி காரணமாக காங்கிரசுடன் நட்பு வைத்திருப்பதாகக் கூறி விமர்சித்தார்.
நாங்கள் சிவசேனாவுக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, உத்தவ் தாக்கரேவின் வீடான மாத்தோஸ்ரீயில் இருந்து யாரையும் சந்திக்க ஒருபோதும் வெளியே வராதாவர்கள், அரசு அமைப்பதற்காக காங்கிரஸ்-என்.சி.பி. கட்சியினரின் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்” என்று அவர் கூறினார்.
மூன்று நாட்கள் முதலமைச்சராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸின் கூட்டணி அரசாங்கம் நிலையற்றதாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
“அவர்கள் உருவாக்கும் அரசு அதன் சுமையாலேயே நசுக்கப்படும் ... அது மூன்று சக்கரங்கள் வெவ்வேறு திசைக்கு இழுப்பது போல இருக்கும். இது மாநிலத்திற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் கவலைப்படுகிறேன்” என்றார்.
பாஜக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகிக்கும் என்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு குரல் கொடுக்கும் என்றும் ஃபட்னாவிஸ் கூறினார்.
“இதற்குப் பிறகு நான் ராஜ்பவனுக்குச் சென்று எனது ராஜினாமாவை அளிப்பேன். யார் அரசு அமைத்தாலும் நான் அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால், இது மிகவும் நிலையற்ற அரசாக இருக்கும். ஏனெனில், கருத்துக்களில் பெரிய வேறுபாடு உள்ளது” என்று அவர் கூறினார்.
பாஜக மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்றது என்ற குற்றச்சாட்டை ஃபட்னாவிஸ் நிராகரித்தார்.
“நாங்கள் ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடமாட்டோம். நாங்கள் எந்த எம்.எல்.ஏ.வையும் வளைக்க முயற்சி செய்ய மாட்டோம் என்று முடிவு செய்தோம். நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறோம் என்று சொன்னவர்கள் முழு குதிரையையும் நிலையானதாக வாங்கியுள்ளனர்” என்றார்.
ஃபட்னாவிஸ் இரண்டாவது முறை முதல்வராக பதவி வகித்த காலம் அம்மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் ஆகும். இதற்கு முன்பு, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.கே.சாவந்த் தான் 1963 இல் 9 நாட்கள் முதல்வராக இருந்தார்.
இன்று காலை, உச்சநீதிமன்றம் மகாராஷ்டிராவில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும் என வலியுறுத்திய என்.சி.பி-காங்கிரஸ்-சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
“குதிரை பேரம் போன்ற சட்டவிரோத நடைமுறைகளைக் குறைப்பதற்கும் நிச்சயமற்ற தன்மையைத் தவிர்ப்பதற்கும் நிலையான அரசாங்கத்தை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை சீராக நடத்துவதற்கும் இந்த விஷயத்தில் சில இடைக்கால வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
சேனா-காங்கிரஸ்-என்.சி.பி கூட்டணி திங்கள்கிழமை மாலை மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்களின் பலத்தைக் காட்டியது. தங்கள் பக்கம் உள்ள 162 எம்.எல்.ஏ.க்களை அணிவகுக்கச் செய்தது. அவர்கள், தங்கள் கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இருப்பினும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையை நிரூபிப்பதில் நம்பிக்கை இருப்பதாக பாஜக கூறியது. “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனை எப்போது நடத்தப்பட்டாலும் நாங்கள் வெல்வோம் என உறுதியாக நம்புகிறோம். ஒரு ஹோட்டலில் இப்படியான அணிவகுப்புகள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உதவாது” என்று பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலார் கூறினார்.