காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்தது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நேற்று (வியாழக்கிழமை) ராகுலின் செயலை விமர்சனம் செய்தார். நமது நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு அமைப்புகளையும் களங்கப்படுத்தும் தவறான பிரச்சாரம் என்று பேசினார்.
வெளிநாட்டு பயணங்களில் இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் அவமதிப்பதாக கடந்த சில நாட்களாக பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.
முன்னாள் ராஜ்யசபா எம்.பி கரண் சிங் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் தன்கர் கலந்த கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஜனநாயகத்தில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். இந்த நிறுவனங்களின் உயர் மட்டத்தில் இருக்கும் நாம் புகார் செய்பவர்களாக இருக்க கூடாது. நாம் குறைகளை வைத்திருக்க முடியாது. நாம் தீர்வுகளைக் காண வேண்டும். நாம் இன்றுவரை இந்த கிரகத்தின் ஜனநாயகத்தோடு செயல்படுபவர்கள்.
ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் தன்கர் பேசுகையில், செயல்பாடு, துடிப்பான ஜனநாயகம் என நமது வரலாற்று சாதனைகளை உலகம் பாராட்டிக்கொண்டிருக்கும் வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நம்மில் சிலர், நன்கு வளர்க்கப்பட்ட நமது ஜனநாயக விழுமியங்களை சிந்தனையற்ற, நியாயமற்ற முறையில் இழிவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். இதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நாட்டிற்கு வெளியே ஒரு எம்.பி-யின் இந்த பேச்சை கேட்டு நான் மௌனம் காத்தால் அது தவறான முன்மாதிரியாக இருக்கும். இந்திய நாடாளுமன்றத்தின் குரல்கள் முடக்கப்படுகின்றன என்ற பேச்சுக்களை எவ்வாறு புனிதப்படுத்துவது? எப்படி இவ்வாறு சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த அவர், "அரசியல் வரலாற்றின் இருண்ட அத்தியாயமாக எமர்ஜென்சி காலம் உள்ளது. இந்திய ஜனநாயக அரசியல் தற்போது வளர்ச்சியடைந்துள்ளது. அது மீண்டும் அவசரநிலைக்கு செல்ல முடியாது " என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/