/indian-express-tamil/media/media_files/2025/08/23/dharmasthala-2025-08-23-14-58-57.jpg)
தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரர் கைது
கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா என்ற பகுதி, கடந்த சில மாதங்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தர்மஸ்தலாவில் பல பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டதாக அங்குள்ள கோயிலில் தூய்மை பணியாளராக முன்பு பணியாற்றிய ஒருவர் அளித்த புகார் நாட்டையே உலுக்கியது
இந்நிலையில், தர்மஸ்தலா ரகசிய புதைகுழிகள் குறித்த வழக்கு, திசை மாறிச் செல்கிறது. கடந்த 2 தசாப்தங்களாக கோயிலுக்குச் சொந்தமான நகரில் பல கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் புதைகுழிகள் இருந்ததாக குற்றம்சாட்டிய புகார்தாரரை, சிறப்பு புலனாய்வு குழு (SIT) இன்று (சனிக்கிழமை) கைது செய்தது.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா இந்த கைது நடவடிக்கையை உறுதிசெய்ததோடு, அடையாளம் வெளியிடப்படாத புகார்தாரர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்று கூறினார். இந்த கைது, கர்நாடகாவில் எதிர்க்கட்சியான பாஜக-வால் திட்டமிடப்பட்ட மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு முன்னதாக நிகழ்ந்துள்ளது. காங்கிரஸ் அரசு இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோயிலை அவதூறு செய்வதாக பா.ஜ.க. குற்றம்சாட்டிவருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
1995 முதல் 2014 வரை அந்தப் பகுதியில் சுகாதாரப் பணியாளராகப் பணிபுரிந்த புகார்தாரரின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூலை மாதம் இந்த வழக்கின் மையமாக இருந்த கோயில் பகுதியில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்தக் கைது குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுகையில், இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தொடர்ந்து கூறி வருகிறது. விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும், அரசு "நீதியின்" பக்கத்தில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
"பா.ஜ.க.வினர் எதுவும் பேசவில்லை, அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். நான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிறகு அவர்கள் பேசுகிறார்கள்" என்று சிவகுமார், புகார்தாரர் கைது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வுக்குச் சற்று முன்பு, 2003-ம் ஆண்டு தர்மஸ்தலாவில் தன் மகள் காணாமல் போனதாக காவல்துறையில் புகாரளித்த பெண், தன் வாக்குமூலம் போலியானது என்று தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, நீதி கிடைக்க உதவுவதாக சிலர் வாக்குறுதியளித்ததால், இந்த வாக்குமூலங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறி அவர் தன் வார்த்தைகளை மீண்டும் மாற்றிக்கொண்டார்.
ஜூலை 19-ம் தேதி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, 16 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து, 2 எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்தது. மேலும் மனித டி.என்.ஏ. இருப்பதைக் கண்டறிய அனைத்து இடங்களிலிருந்தும் மண் மாதிரிகளையும் சேகரித்தது. 2 வாரங்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறிய அளவிலான (அ) எந்த முடிவுகளும் கிடைக்காததால், தேடுதல் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தக்கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுக்கு விசாரணையை நிறுத்தும்படி அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக, இந்த விசாரணை தர்மஸ்தலா கோயிலை அவதூறு செய்ய சதி என்று குற்றம்சாட்டியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.