Governor proposal to confer DLitt on President : கேரள அரசுக்கும் கேரள ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வெள்ளிக்கிழமை அன்று, சி.பி.ஐ.(எம்) அரசு, கேரள பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் செய்த பரிந்துரையில் தலையிட்டதா என்றும், அந்த தலையீட்டின் காரணமாக தான் அந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முதல்வர் பினராயி விஜயனிடம் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக எந்தப் பணியையும் செய்யப் போவதில்லை என்ற கூறிய தனது முடிவை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வியாழக்கிழமை மீண்டும் உறுதி செய்தார். பல தீவிரமான சிக்கல்கள் உள்ளன, அதை நான் வெளியிட விரும்பவில்லை. நாட்டின் கண்ணியத்தை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவை மிகவும் தீவிரமான பிரச்சினைகள் என்று கான் வியாழக்கிழமை அன்று கூறினார்.
ஆளுநரின் அறிக்கையை குறிப்பிட்டு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதலா, குடியரசுத் தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர மறுப்பது தான் நாட்டின் கண்ணியத்தை பாதிக்கும் பிரச்சினையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
அரசின் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிப்பவர்கள், கேரள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம், பட்டம் அளிப்பது தொடர்பாக, ஆளுநர் பரிந்துரை வைத்தாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் கேரள பல்கலைக்கழகம் இந்த பரிந்துரையை அரசின் தலையீட்டால் வேண்டாம் என்று நிராகரித்ததா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் சென்னிதலா.
கேரள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், இந்த விசயத்தை பல்கலைக்கழக சிண்டிகேட்டில் வைக்காமல், ராம்நாத் கோவிந்துக்கு பட்டம் அளிப்பது தொடர்பாக அரசின் கருத்தைக் கேட்டாரா என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமைகள் இருக்கிறதா என்றும் சென்னிதலா கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த கேரளா உயர்கல்வித்துறை அமைச்சர், பேராசிரியர் ஆர். பிந்து, கேரளா பல்கலைக்கழகம் குடியரசுத் தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பது தொடர்பாக அரசின் கருத்தைக் கேட்கவில்லை. அது பல்கலைக்கழகத்தின் அதிகாரங்களின் கீழ் இருக்கிறது. இதில் நாங்கள் எந்தவிதமான தலையீடும் செய்யவில்லை என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil