திரிபுரா மாநில புதிய முதல்வராக பாஜகவின் விப்லப் குமார் தேப் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் மோடி, பிஜேபியின் மூத்தத்தலைவர் அத்வானியை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisment
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடக்கிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மூன்று மாநிலங்களிலும் பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, திரிபுராவில் 25 ஆண்டுகளாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், திரிபுராவில் உள்ள கர்தலாவில் பிஜேபியைச் சேர்ந்த விப்லப் குமார் திரிபுராவின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ததகதா ராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதம்ர் மோடி உட்பட அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அப்போது, விழாவின் மேடைக்கு மோடி வருகை தந்த போது அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
ஒவ்வொருவருக்கும் பதில் வணக்கம் செலுத்திய மோடி, அத்வானியைக் கடக்கும் போது கையை கீழே இறக்கினார், இந்த நிகழ்வு தற்போது வீடியோவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. அத்வானியை மோடி புறக்கணிப்பது போன்று நடந்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.