சண்டிகரில் சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமதமாக வந்ததால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் வெயிலில் வெகுநேரம் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.ஆர். எனப்படும் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்,
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், காலையிலிருந்தே மாற்றுத்திறனாளி குழந்தைகள் சாப்பிடாமல் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்காக காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தமாக சுமார் மூன்று மணிநேரம் வெயிலில் அக்குழந்தைகள் காக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்திலிருந்து அரை மணிநேரம் தாமதமாகவே அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அங்கிருந்த 2 வயது குழந்தையின் தாய் அனிதா குமாரி என்பவர் கூறுகையில், “என் மகளுக்கு பசி ஏற்பட்டது. காலை 9 மணி முதல் நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால், 11.30 மணிவரை அமைச்சர் வரவில்லை. இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறியிருந்தால், நான் என் மகளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வந்திருப்பேன்”, என கூறினார்.