Advertisment

‘டில்லி சலோ’ அணிவகுப்பு: ஹரியானா காவல்துறை விவசாயிகளை தடுக்க முயன்றதில் 22 வயது பஞ்சாப் இளைஞர் மரணம்

‘டில்லி சலோ’ அணிவகுப்பு போராட்டம்: விவசாயிகளை ஹரியானா காவல்துறை தடுக்க முயன்றபோது 22 வயது பஞ்சாப் இளைஞர் மரணம்; போராட்டத்தை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்த விவசாயிகள்

author-image
WebDesk
New Update
farmer protest khanauri

பஞ்சாப்- ஹரியானா எல்லையில் உள்ள கானௌரியில் விவசாயிகள் புதன்கிழமை கூடியிருந்தபோது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஜஸ்பிர் மல்ஹி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kanchan Vasdev , Navjeevan Gopal

Advertisment

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதத்தைக் கோரி டில்லி சலோஅணிவகுப்பை மேற்கொண்டபோது அவர்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகளையும், விவசாயிகளின் கூற்றுப்படி, ரப்பர் தோட்டாக்களையும் ஹரியானா காவல்துறையினர் பயன்படுத்தியபோது, 22 வயதான பஞ்சாப் விவசாயி, மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள கானௌரி எல்லை பகுதியில் புதன்கிழமை தலையில் காயம் காரணமாக இறந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: ‘Dilli Chalo’ march: 22-year-old from Punjab dies as Haryana uses force to stop farmers

விவசாயிகளின் அணிவகுப்பைத் தடுக்க ஹரியானா காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த கானௌரி மற்றும் ஷம்பு எல்லை பகுதிகளில் மொத்தம் 26 பேர் காயமடைந்ததாக பஞ்சாப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராமத்தைச் சேர்ந்த சுப்கரன் சிங் என்ற இளைஞர், தலையில் காயம் ஏற்பட்டு இறந்த பிறகு, விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் முதல் பலி ஆனார். சுப்கரன் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் "இறந்ததாக" அறிவிக்கப்பட்டார்.

சுப்கரனின் தலையில் காயம் ஏற்பட்டது எதனால் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாட்டியாலா ரேஞ்ச் டி.ஐ.ஜி ஹர்சரண் சிங் புல்லர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “டாக்டர்களால் இறப்புக்கான சரியான விவரங்கள் வெளியிடப்படும், ​​எங்களிடம் உள்ள தகவல் என்னவென்றால், ரப்பர் புல்லட் அவரை (சுப்கரன்) தாக்கியது. டாக்டர்களை ஒருங்கிணைக்க டி.எஸ்.பி.,யை அனுப்பியுள்ளோம்என்று கூறினார்.

கானௌரி எல்லையில் உயிரிழந்த போராட்டக்காரர் சுப்கரன் சிங்

ஹர்சரண் சிங் புல்லர் தனக்கு கிடைத்த முதற்கட்ட தகவலை மேற்கோள் காட்டி, "எதிர்ப்புக் குழுவினர் தீ வைப்பதன் மூலம் புகை திரையை உருவாக்க முயன்றனர், மேலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வீசினர்," என்று கூறினார்.

இதுகுறித்து ராஜிந்திரா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஹர்னம் சிங் ரெக்கி கூறுகையில், “தலையின் பின்பகுதியில் காயத்துடன் சுப்கரன் கானௌரியில் இருந்து இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார்என்று கூறினார். இது புல்லட் காயமாக இருக்கலாம், ஆனால் காயத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று டாக்டர் கூறினார். தோட்டா தாக்கிய பின் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் கூறியதற்கு, டாக்டர் ரெக்கி, "இதை நிராகரிக்க முடியாது" என்று கூறினார்.

இளைஞரின் மரணம் காரணமாக விவசாயிகள் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வரை நிறுத்தி வைத்தனர். ஷம்பு எல்லையில் இருந்த கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பந்தேர், அவர்கள் வெள்ளிக்கிழமை நிலைமையை "ஆய்வு செய்வார்கள்" என்று கூறினார்.

மாலையில், கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்ட BKU ஏக்தாவின் (சித்துபூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா அமைதிக்காகவும், பேச்சுவார்த்தைக்கு திரும்பவும் அழைப்பு விடுத்தார்.

நான்காவது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு கோரிக்கை, பயிர் பல்வகைப்படுத்தல், முட்புதர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு எதிரான FIRகள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. மீண்டும் விவசாயத் தலைவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். அமைதியை நிலைநாட்டுவது எங்களுக்கு முக்கியம்என்று அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறினார்.

சுப்கரனின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்தார். நான் சம்பவத்தின் வீடியோவைப் பார்த்தேன். நாங்கள் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வோம்,” என்று பகவந்த் மான் கூறினார்.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் மற்றும் டி.ஜி.பி எஸ்.எஸ் கபூர் ஆகியோரை தொடர்பு கொண்டு கருத்துகளை பெற இந்தியன் எக்ஸ்பிரஸ் முயன்றது, ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கானௌரி சம்பவம் குறித்து X தளத்தில் வீடியோ அறிக்கையில், ஹரியானா காவல்துறை AIG மனிஷா சௌத்ரி, "போராட்டக்காரர்கள் காவல்துறையினரை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து, மிளகாய்ப் பொடியைத் தூவி, நெற்பயிர்களுக்குத் தீ வைத்தனர், தடியடிகள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி காவல்துறையினரைத் தாக்கினர் மற்றும் கல் வீச்சுகளில் ஈடுபட்டனர். 12 காவல்துறையினர் பலத்த காயமடைந்தனர்" என்று கூறினார். அந்த அறிக்கையில் சுப்கரனின் மரணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாட்டியாலா துணை ஆணையர் எஸ்.ஏ பார்ரே கூறுகையில், கானௌரியில் 17 பேர் மற்றும் ஷம்புவில் 9 பேர் என குறைந்தது 26 பேர் காயமடைந்தனர். நான்கு பேர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், என்று கூறினார்.

முன்னதாக, ஷம்புவில், பந்தேர் மற்றும் தலேவால் உள்ளிட்ட விவசாயிகள் தலைவர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் எல்லையை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​தலேவால் நாங்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எந்த ஆத்திரமூட்டலும் இல்லை. ஆனால் அவர்கள் (ஹரியானா காவல்துறையினர்) எங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசத் தொடங்கினர். இளைஞர்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றனர். இளைஞர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்?” என்று கூறினார்.

கானௌரியில் இளைஞரின் மரணம் குறித்த செய்தி வருவதற்கு முன்பு, காலை 11 மணிக்கு அணிவகுப்பு தொடங்குவதற்கு அழைப்பு விடுத்த விவசாயிகள் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக ஷம்பு எல்லையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுப்கரன் இறந்த தகவல் அறிந்ததும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment