தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்கட்சிகளுடன் திமுக பங்கு பெறாதது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனது முதல் சர்ச்சையும் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இதர நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக செல்லமேஸ்வர் உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையாக புகார் கூறினர்.
தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த சிக்கலால, லோயா வழக்கு வந்திருக்கிறது. லோயா, சிபிஐ சிறப்பு நீதிபதியாக இருந்தவர்! பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புடையை போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்தவர் லோயா! கடந்த 2014-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த இடத்தில் லோயா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு தள்ளுபடி செய்தது. இதையொட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை எம்.பி.க்கள் 100 பேர் அல்லது மாநிலங்களவை எம்.பி.க்கள் 50 பேர் கையொப்பம் இடவேண்டும். பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 7 கட்சிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ராஜ்யசபை எம்.பி.க்கள் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை போதுமானது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் நால்வரும் இதில் கையெழுத்திடாதது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் பாஜக.வையும், மத்திய அரசையும் தீவிரமாக எதிர்த்து வரும் கட்சி திமுக என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் திமுக, இந்தப் பிரச்னையில் எதிர்க்கட்சிகளுடன் கை கோர்க்காதது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும் எதிர்கட்சிகளுடன் சேரவில்லை. பதவி நீக்கத் தீர்மானத்தை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை. அதனாலேயே இந்தக் கட்சிகள் இதில் இணையாமல் இருக்கலாம் என கருதப்படுகிறது.