தீபக் மிஸ்ரா மீதான தகுதி நீக்கத் தீர்மானத்தை வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சி தோல்வியை தழுவுகிறது.
தீபக் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றது முதல் சில சர்ச்சைகளும் இருந்து வந்திருக்கின்றன. ஏற்கனவே செல்லமேஸ்வர் உள்பட 4 மூத்த நீதிபதிகள் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வெளிப்படையாக மீடியாவில் புகார் செய்தனர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தீபக் மிஸ்ரா பாகுபாடு காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த சிக்கல் எதிர்கட்சிகளின் ரூபத்தில் வந்தது. அமித்ஷா தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை தேவையில்லை என தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ‘இம்பீச்மென்ட்’ (நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கத் தீர்மானம்) கொண்டு வர 64 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் கொடுத்தனர்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இரு இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 7 கட்சிகளின் எம்.பி.க்கள் இதில் கையெழுத்து இட்டனர். துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் அதற்கான நோட்டீஸை வழங்கினர். வெங்கையா நாயுடு அந்த நோட்டீஸை நிராகரித்திருக்கிறார். எனவே இம்பீச்மென்ட் கொண்டு வரும் எதிர்கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.