தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதிகள் 2 பேர் எழுதிய கடிதம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ‘அனைத்து நீதிபதிகள் அமர்வை நடத்த வேண்டும்’ என கோரினர்.
தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகிற அக்டோபர் 2-ம் தேதி வரை பதவி வகிக்க முடியும் ஆனால் அதற்கு முன்பாக அவரைச் சுற்றி சர்ச்சைகள் கிளம்பியபடி இருக்கின்றன. அதில் லேட்டஸ்ட், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் ஆகிய இருவரும் எழுதிய கடிதம்!
தீபக் மிஸ்ரா தொடர்பாக சில புகார்களை எழுப்பி கடந்த ஜனவரியில் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் ஆகியோருடன் இணைந்து இவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீபக் மிஸ்ரா ஓய்வுக்கு பிறகு இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு வரும் அளவிலான சீனியாரிட்டியை கொண்டவர் ரஞ்சன் கோகாய் என்பதும் நினைவு கூறத்தக்கது.
தீபக் மிஸ்ராவுக்கு ஏப்ரல் 22-ம் தேதி ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் ஆகிய இருவரும் எழுதிய 2 பக்க கடிதத்தில், ‘உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வை கூட்டும்படி’ கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நீதிமன்ற விவகாரங்கள் குறித்தும், நீதித்துறை எதிர்காலம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள் தகுதி நீக்கத் தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கிய இரு தினங்களில் இந்தக் கடிதத்தை இவர்கள் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது. இது தொடர்பாக இதுவரை பதில் எதையும் தீபக் மிஸ்ரா தெரிவிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும் தேனீர் சந்திப்பு என்ற அடிப்படையில் அனைத்து நீதிபதிகளும் சந்திப்பது வழக்கம். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அந்த சந்திப்பில் இரு நீதிபதிகளின் கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு 4 நீதிபதிகள் தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினர். அதன்பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தலையிடுவதாக குறிப்பிட்டு, அது தொடர்பாக விவாதிக்க முழு நீதிமன்றத்தை கூட்டும்படி நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதினார். ஏப்ரல் 9-ம் தேதி நீதிபதி குரியன் ஜோசப் சில பிரச்னைகளை சுட்டிக்காட்டி இன்னொரு கடிதம் எழுப்பினார். தற்போது ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் எழுதியிருப்பது கடந்த சில வாரங்களில் தீபக் மிஸ்ராவுக்கு எழுதப்பட்டிருக்கும் 4-வது கடிதம் ஆகும்.
தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தகுதி நீக்கத் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தாலும்கூட, நீதிபதிகளில் அடுத்தடுத்த கடிதங்கள் தீபக் மிஸ்ராவுக்கு அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன.