தீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : ‘நம்பத்தகுந்த, சரியான புகார்கள் இல்லை’-வெங்கையா நாயுடு

தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரத்தில் நோட்டீஸ் மீது வெங்கையா நாயுடு முடிவு எடுக்கும் முன்பே பிரஸ் மீட் மூலமாக குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்தினர்.

தீபக் மிஸ்ரா மீதான ‘இம்பீச்மென்ட்’ நோட்டீஸை ராஜ்யசபை தலைவரான வெங்கையா நாயுடு நிராகரித்தது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தீபக் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதி! கடந்த 2017 ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்றார் அவர். அதற்கு முன்பு பாட்னா, டெல்லி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் தீபக் மிஸ்ரா.

தீபக் மிஸ்ராவின் சொந்த மாநிலம், ஒடிஸா! 1991-1992 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மறுமகன் இவர்! வருகிற அக்டோபர் 2 வரை (65 வயது) தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் இருக்கிறது. இதற்கிடையேதான் தீபக் மிஸ்ரா மீதான ‘இம்பீச்மென்ட்’ (நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கத் தீர்மானம்) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய 7 கட்சிகளின் 64 எம்.பி.க்கள் கொடுத்த இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபைத் தலைவரான வெங்கையா நாயுடு நிராகரித்தது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெங்கையா நாயுடு தனது நிராகரிப்பு உத்தரவில், ‘தீபக் மிஸ்ரா மீதான இம்பீச்மென்ட் நோட்டீஸில் நம்பத்தகுந்த சரியான தகவல் இல்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். சட்ட நிபுணர்கள், நாடாளுமன்ற செயலக முன்னாள் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு வெங்கையா நாயுடு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கையா நாயுடு தனது உத்தரவில், ‘எனது முன்பு வைக்கப்பட்ட நம்பத்தகாத, சரிபாக்கப்படாத தகவல், தவறான செயல்பாடு மற்றும் தகுதியின்மையின் அடையாளங்களாக இருக்கின்றன’ என்கிறார். அதாவது, எதிர்கட்சிகளின் இம்பீச்மென்ட் நோட்டீஸில் தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து, ‘தவறான செயல்பாடு மற்றும் தகுதியின்மை’ என்கிற வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தார்கள். அதே வார்த்தைகளை தனது உத்தரவில் எதிர்க்கட்சிகள் மீது நாயுடு திருப்பியிருப்பது அவருக்கே உரித்தான சொல்லாட்சி!

தொடர்ந்து, ‘இது போன்ற தகவல்களை ஏற்பது சரியானதாகவோ, பொறுப்பான செயலாகவோ இருக்காது. நிகரற்ற ஜனநாயக பாரம்பரியத்தின் வாரிசுகள் மற்றும் காப்பாளர்கள் என்ற முறையில், அரசியல் சட்ட அமைப்புகளின் அடிப்படையை நாம் வலுப்படுத்த வேண்டும். நமது அரசாட்சியின் எந்த ஒரு தூணையும் எண்ணம், செயல், வார்த்தை மூலமாக பலவீனமாக்க நாம் அனுமதிக்க முடியாது. இறுதியாக விரிவான கலந்தாலோசனைகள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்துகளை ஆய்ந்த பிறகு இந்த முடிவை எடுக்கிறேன். இந்த நோட்டீஸை அனுமதிப்பது சரியானதோ, பொறுப்பானதோ இல்லை.’ என தனது 10 பக்க உத்தரவில் விளக்கியிருக்கிறார் நாயுடு.

காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளும், ‘முறைகேடு, பதவியை தவறாக பயன்படுத்துதல், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கத் தவறுதல்’ ஆகிய புகார்களை சுமத்தி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக இம்பீச்மென்ட் நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெங்கையா நாயுடு தனது உத்தரவில், 1993-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். எம்.கிருஷ்ணசாமி, இந்திய அரசு இடையிலான வழக்கில், ‘இது போன்ற தீர்மானத்தை அனுமதிக்கும் முன்பு சபாநாயகர் (இங்கு ராஜ்யசபை என்பதால், துணை ஜனாதிபதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்க வேண்டும். அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருக்கும் புகாருக்கான முகாந்திரம், அது தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை குறித்து கருத்து கேட்கப்பட வேண்டும். அவற்றை ஆவணமாக்க வேண்டும். அந்த ஆவணத்தை பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க வேண்டும். அல்லது, நோட்டீஸை நிராகரிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கையேடு ஒன்று உண்டு. அதில் உள்ள முக்கியமான ஒரு குறிப்பு, எந்த மசோதாவையும் நோட்டீஸாக கொடுத்துவிட்டு அது ஏற்கப்படும் முன்பே வெளியே விளம்பரப்படுத்தக் கூடாது. ஆனால் தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரத்தில் நோட்டீஸ் மீது வெங்கையா நாயுடு முடிவு எடுக்கும் முன்பே பிரஸ் மீட் மூலமாக குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்தினர். இந்த விதி மீறலையும் தனது உத்தரவில் வெங்கையா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வெங்கையா நாயுடுவின் நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது. இன்னும் என்னென்ன திருப்பங்கள் இதில் காத்திருக்கிறதோ?

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close