தீபக் மிஸ்ரா ‘இம்பீச்மென்ட்’ : காங்கிரஸின் கடைசி ஆயுதமும் பலன் அளிக்கவில்லை

தீபக் மிஸ்ரா தொடர்பான பிரச்னை என்பதால், இந்த அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதிட்டார்.

தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் நிராகரிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மனுவை அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபை எம்.பி.க்கள் 64 பேர் கையொப்பமிட்டு பதவி நீக்கத் தீர்மானத்திற்கு (இம்பீச்மென்ட்) நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் அதில் தலைமை நீதிபதியின் நடத்தை மீறலுக்கு ஆதாரம் இல்லை என சுட்டிக்காட்டி, ராஜ்யசபை தலைவரான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

வெங்கையா நாயுடுவின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்யாய் யாஜ்னிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜரானார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டியில் 2-வது இடத்தில் உள்ள மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வில் நேற்று (மே 7) இந்த மனு தொடர்பாக முறையிட்டார் கபில் சிபல்.

முதலில், ‘தலைமை நீதிபதி அமர்வில் இதை முறையிடலாமே?’ என கேள்வி எழுப்பிய செல்லமேஸ்வர், எஸ்.கே.கவுல் அமர்வு பிறகு மறுநாள் (செவ்வாய்கிழமை) வந்து முறையிடும்படி கேட்டுக்கொண்டது. இதற்கிடையே இந்த மனுவை சீனியாரிட்டியில் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருக்கு அடுத்தபடியாக 6-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு பட்டியலிட்டு நேற்று இரவு உத்தரவு வழங்கப்பட்டது.

சீனியாரிட்டியில் தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த இடத்தில் உள்ள 4 நீதிபதிகளும் கடந்த ஜனவரியில் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக வெளிப்படையாக புகார் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று (மே 8) விசாரணைக்கு வந்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரின் சார்பிலும் ஆஜரான கபில் சிபல், இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது தொடர்பான நிர்வாக உத்தரவு நகலைக் கேட்டார். ஆனால் அந்தக் கோரிக்கையை அரசியல் சாசன அமர்வு ஏற்கவில்லை. தீபக் மிஸ்ரா தொடர்பான பிரச்னை என்பதால், இந்த அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதிட்டார்.

ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால், ‘அரசியல் சாசன அமர்வை அமைக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு’ என குறிப்பிட்டார். இது போன்ற அரசியல் சாசன அமர்வை அமைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்ற பதிவாளரின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.

சுமார் முக்கால் மணி நேரம் நீண்ட வாதங்களுக்கு பிறகு, ‘இந்த மனு விசாரிக்கத் தகுதியானது இல்லை’ என அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டனர். கபில் சிபலை இந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கூறினர். தொடர்ந்து மனுவை அரசியல் சாசன அமர்வு தள்ளுபடி செய்தது. இதன் மூலமாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

 

×Close
×Close