தீபக் மிஸ்ராவுக்கு மீண்டும் நெருக்கடி உருவாகிறது. மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரைக்க கொலிஜியம் கூட வேண்டியிருக்கிறது.
தீபக் மிஸ்ரா, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். ஏற்கனவே இவரை தகுதி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளின் ராஜ்யசபை எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அதை ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஏற்கவில்லை.
இதற்கிடையே உத்தரகாண்டு மாநில தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ‘கொலிஜியம்’ பரிந்துரை செய்தது. கொலிஜியம் என்பது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதிகள் நால்வரை உள்ளடக்கிய அமைப்பு ஆகும்.
தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் கொலிஜியத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மற்ற 4 நீதிபதிகளும் கடந்த ஜனவரி மாதமே வெளிப்படையாக புகார் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் ஐவரும் செய்த பரிந்துரையில் இந்து மல்ஹோத்ராவின் நியமனத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த மாதம் அவர் பொறுப்பேற்றார்.
ஆனால் கே.எம்.ஜோசப் பெயரை மத்திய அரசு ஏற்கவில்லை. கேரளா நீதித்துறை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதால் வேறு மாநிலத்திற்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டும் என மத்திய அரசு தனது நிராகரிப்புக்கு காரணம் கூறியது. மறு பரிசீலனைக்காக அது தொடர்பான கோப்பை உச்ச நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் கொலிஜியத்தில் இடம் பெற்றிருக்கும் மூத்த வழக்கறிஞர்களான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (மே 9) மாலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அவரது சேம்பரில் சந்தித்தனர். அதிகாரபூர்வமற்ற முறையிலான சந்திப்பு இது. அப்போது நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்னைகளை தீக்கும் வழிமுறைகள் குறித்தும், கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரை செய்வது குறித்தும் மூவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பரிந்துரைக்க வற்புறுத்தி கொலிஜியத்தில் இடம்பெற்ற மற்றொரு மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் ஏற்கனவே கொலிஜியத்தில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் விடுமுறையில் சென்றிருப்பதால் நேற்று தீபக் மிஸ்ராவுடன் நடந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
கொலிஜியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளின் வலியுறுத்தல் காரணமாக மீண்டும் கொலிஜியத்தை கூட்ட வேண்டிய நெருக்கடி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஏற்பட்டிருக்கிறது. கே.எம்.ஜோசப் விவகாரத்தை மட்டும் முன்வைத்து கொலிஜியம் கூடும்பட்சத்தில் மீண்டும் கே.எம்.ஜோசப் பெயரை கொலிஜியம் பரிந்துரைக்கும் வாய்ப்புகளே இருக்கின்றன. அப்படி மீண்டும் பரிந்துரைத்தால், அதை ஏற்றுக்கொண்டு கே.எம்.ஜோசப்புக்கு நியமன உத்தரவு வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்தபோது அந்த உத்தரவை ரத்து செய்து அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உத்தரவிட்டவர் கே.எம்.ஜோசப். அந்த காரணத்திற்காகவே அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது இங்கு நினைவு கூறத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.