இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது, பிரிந்த சகோதரர்கள் 75 வருடங்கள் கழித்து ஒன்றாக சந்தித்தனர். இந்நிலையில் தற்போது ஒருவரின் மரணம் மீண்டும் இருவரையும் பிரித்துள்ளது.
சாதிக் கான் என்ற 85 வயது நபர், பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் உள்ள அம்ரிஸ்தரில் வாழும் தனது சகோதரர் சிக்கா கானுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.
”நாங்கள் வீடியோ கால் மூலம் பேசினோம். பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும், தெம்புடனும் இருந்தார். அவரை இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டேன். வெயில் காலம் முடியும் வரை காத்திருக்குமாறுச் சொன்னார். அதன் பிறகு வருவதாக கூறினார். ஆனால் அதுவே எங்கள் கடைசி தொலைபேசி அழைப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை “ என்று கண்ணீருடன் சிக்கா கான் கூறுகிறார். சாதிக் கான், ஜூலை 4ம் தேதி மரணமடைந்துள்ளார்.
1947 நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் பிரிவியனையின் போது சிக்கா கான் மற்றும் சாதிக் கான் என்ற ஒரு சகோதரர்களும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் ஜனவரி 10ம் தேதி பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தாபார் ஷயிப் என்ற இடத்தில் இருவரும் சந்தித்தனர். இருவரும் கண்ணீருடன், கட்டியணைத்துக் கொண்டது, உலகம் முழுவதும் செய்தியாகின.
1947ம் ஆண்டு வெயில் காலத்தில், சாதிக் கான் 10 வயதாக இருக்கும்போது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்றது. சாதிக் மற்றும் அவரது தந்தை இருவரும், பதிந்தாவில் உள்ள ப்ளுவா என்ற இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நடைபெற்ற கலவரத்தில் தந்தை கொல்லப்பட்டார். சாதிக் கான், பைசலாபாத்தின் போக்ரனில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்தார். பின்பு அவர் திருமணம் செய்து கொண்டு, பேரக் குழந்தை வரை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்த சிக்கா கானின் அம்மா தற்கொலை செய்து கொண்டார். இந்தியா பிரிவினைக்கு பிறகு சிக்கா கானின் சகோதரி மரணமடைந்தார். மேலும் சிக்கா திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நசிர் தில்லன் என்ற யூடியூபர், சாதிக் கானின் வீடியோவை 2019ம் ஆண்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து சிக்கா கான் வசிக்கும் கிராமத்திலிருந்து சாதிக் கானுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இருவராலும் உடனடியாக சந்தித்துக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் சாதிக் கான் மரணம் தொடர்பாக சிக்கா கான் பேசும்போது “ மீண்டும் எங்களுக்கு இடையில் இரு நாட்டு எல்லைகளும் வந்துவிட்டது. எனது சகோதரரின் இறுதி சடங்கிற்கு என்னால் செல்ல முடியவில்லை” என்று கூறினார்.
மேலும் அடுத்த வாரம் சிக்கா கான், அவரது சகோதரின் மறைவுக்கு பிறகு நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்கிறார்.
இந்நிலையில் தில்லன் கூறுகையில் ” சிக்கா கானுடன் சேர்த்து இரண்டு பேருக்கும் பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது” என்று கூறினார்.
மேலும் சாதிக் கானின் மரணம் திடீரென்று நடந்துவிட்டது என்றும் சொந்த வயலுக்கு சென்று திரும்பிய, சாதிக் கான் உடல் நிலை சரியில்லை என்று சொன்னார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்தார் என்றும் அவர் கூறினார்.
சிக்கா இது தொடர்பாக கூறுகையில் “ இந்த வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துக்கொண்டதற்கு நான் கடவுளிடம் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்த பிறவியிலும் கூட நாங்கள் இருவரும் சகோதரராக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“