கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய வார்த்தையை திருப்பிப் போட்டு காங்கிரஸ் சமூகவலைதளப் பிரிவு தலைவியான நடிகை ‘குத்து’ ரம்யா விமர்சித்தார்.
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மேற்கொண்ட பிரசாரத்தின் நிறைவு நிகழ்ச்சியில் நேற்று (பிப்ரவரி 4) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதில் பேசிய மோடி, ‘விவசாயிகளுக்கு தனது அரசு ‘டாப்’ முன்னுரிமை கொடுப்பதாக’ குறிப்பிட்டார். ‘டாப்’ என்கிற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான ‘டி’ டொமட்டோவையும் (தக்காளி), இரண்டாம் எழுத்தான ‘ஓ’ ஆனியனையும் (பல்லாரி), மூன்றாம் எழுத்தான ‘பி’ பொட்டட்டோவையும் (உருளைக்கிழங்கு) குறிப்பதாக ‘டைமிங்’கையும் ‘ரைமிங்’கையும் மிக்ஸ் செய்தார் மோடி.
கர்நாடகாவை சேர்ந்தவரும், காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவியுமான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா (இவர் தமிழில் சிம்பு ஜோடியாக ‘குத்து’ படத்தில் நடித்தவர்) தனது ட்விட்டர் பக்கத்தில் இதை விமர்சித்து கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில், ‘இஸ் திஸ் வாட் ஹேப்பன்ஸ், வென் யூ ஆர் ஆன் பாட்?’ என ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.
‘டாப்’ என மோடி ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தையில் உள்ள எழுத்துகளை திருப்பிப் போட்டு, ‘பாட்’ என்கிற வார்த்தையை ரம்யா பயன்படுத்தியிருக்கிறார். ‘நீங்கள் பானையில் இருக்கிறபோது, இது நடக்கிறதா?’ என்பதே ரம்யாவின் ட்விட்டுக்கு நேரடி அர்த்தம்! நாட்டின் பிரதமரை பானையில் இருப்பதாக மலிவான விமர்சனத்தை முன்வைப்பதா? என இதற்கு பாஜக.வினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக செய்தி தொடர்பாளரான ஜி.வி.எல்.நரசிம்மராவ், ‘நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும், பிரதமருக்கும்கூட நீங்கள் என்ன குறிப்பிட்டீர்கள் என புரியவில்லை. ஆனால் உங்கள் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக புரிந்திருப்பார். இதுபோன்ற அத்துமீறலான விமர்சனம் மூலமாக நாட்டு மக்களை நீங்கள் காயப்படுத்தும்போது, உங்கள் தலைவர் பெருமைப்படுவார்’ என குறிப்பிட்டார்.
பாஜக.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மால்வியா, ‘நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக (காங்கிரஸ் ஆளும்) கர்நாடகாவில் 3500 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக பேசுவது, ‘பானையில் இருப்பது’ என்றால், காங்கிரஸ் அதன் தரத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது’ என்றார் அவர்.
‘குஜராத் தேர்தல் நெருக்கத்தில் மணி சங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுத்த ராகுல், கர்நாடகாவில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அமைதியாக இருக்கப் போகிறாரா? அல்லது, ஒரு தலைவராக தன் வளர்ச்சிக்கு தனது நெருங்கிய சகாவை ‘தியாகம்’ செய்யப் போகிறாரா? கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள்!’ என ராகுலை சீண்டியிருக்கிறார்.
ரம்யாவின் ட்விட்டுக்கு, ‘சமையலில் பொட்டட்டோ, ஆனியன், டொமட்டோ ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறாரா மோடி?’ என்பதே அர்த்தம்! இது கேலியான கமெண்டே தவிர, இதில் தவறு இல்லை’ என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கிறார்கள். ரம்யாவின் ட்விட்டுக்கு பின்னூட்டமாக, ‘நீங்கள் குறிப்பிடும் ‘பாட்’ என்பது, பொட்டட்டோ, ஆனியன், டொமட்டோதானே?’ என ஒருவர் கேட்கிறார். அதற்கு, ‘இருக்கலாம்!’ என பதில் கூறுகிறார் ரம்யா.
நடிகை ரம்யா, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் பிரசார பீரங்கியாக இருக்கப் போகிறவர்! அதற்கான முன்னோட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டார் என்பதுதான் நிஜம்!