தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பதால், ‘குட்டி ஜப்பான்’ சிவகாசியின் கதி என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுப்படுவதாக கூறி, பட்டாசு விற்பனைக்கு தடை கோரிய பொது நல வழக்கை இன்று (அக்டோபர் 23) விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி அன்றிரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மட்டும் பட்டாசு வெடித்துக் கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஓரிரு நாட்களாவது இத்தடையை விலக்க வேண்டுமென பட்டாசு உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இத்தடை காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளும் சோதனை முயற்சியாகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தது.
இந்நிலையில், இந்தாண்டும் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு தரப்பினரின் வாதங்களை கேட்ட பின்னர், இவ்வழக்கில் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
தீபாவளி அன்றிரவு 8 மணி முதல் 10 மணி வரையில், இரண்டு மணி நேரங்கள் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைன் மூலமாக பட்டாசுகள் விற்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் பட்டாசு விற்பனைத்தடை பொருந்தும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மட்டும் இரவு 11:45 முதல் நள்ளிரவு 12:45 வரையில் ஒரு மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 130 கோடி மக்களின் உடல்நலன் குறித்தான அக்கறையோடு, பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இத்தீர்ப்பை தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே தமிழகத்தில் பட்டாசுகளை வெடித்து தள்ளத் தொடங்கிவிடுவார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் இருந்தே வேட்டுச் சத்தம் விண்ணை அதிரச் செய்யும். இந்நிலையில், பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை தந்துள்ளது.
தவிர, இந்தக் கட்டுப்பாடு காரணமாக பட்டாசு விற்பனை ‘டல்’லாகவே இருக்கும். தமிழகத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை சக்கரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கதி என்ன? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே இதில் சட்டபூர்வ மேல் நடவடிக்கைகளை தொடர்வது குறித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.