பண மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 23 புதன்கிழமை) ஜாமீன் வழங்கியுள்ளது. பிணைத்தொகை ரூ .25 லட்சம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி ஜாமீன் கொடுக்கப்பட்டுளது . மேலும் இந்த வழக்கின், விசாரணை முடிவடையும் வரை வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
Advertisment
அவருக்கு எதிராக வருமான வரித் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி கைது செய்தது. ஹவாலா சேனல்கள் மூலம் கணக்கிடப்படாத பணத்தை சேர்த்தார் என்பது அவரின் மீதுள்ள குற்றச்சாட்டு.
வரி ஏய்ப்பு , ‘ஹவாலா’ பரிவர்த்தனை போன்ற செயல்களுக்காக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அமலாக்கத் துறை அவர் மீத வழக்கு பதிவு செய்திருந்தது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 17 ம் தேதி சிவகுமாரின் ஜாமீன் மனுவை விசாரித்தபோது, அமலாக்க இயக்குநரகத்தின் (ED) சட்ட அதிகாரி நீதிமன்றத்தில் வாதாடுவதற்கே வராமல் இருந்ததால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைட் மிகவும் மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.
எங்களோடு கண்ணாம் பூச்சி விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
சிவகுமார் பலமானவர், ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை கலைத்துவிடுவார், வெளிநாடு தப்பி சென்றுவிடுவார் என்ற வாதங்களையும் ஏற்கமறுத்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இன்று முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி , திஹார் சிறையில் உள்ள சிவகுமாரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.