நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடுவதால், முதல் நாளில் இருந்தே அமளியாக சென்று கொண்டு இருக்கிறது
இந்நிலையில் இன்று, மாநிலங்களையில் அணை பாதுகாப்பு 2019 மசோதாவை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களாக அமளி காரணமாக மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறவில்லை.
அணை பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?
நாடு முழுவதும் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாப்பது பற்றியது அணை பாதுகாப்பு மசோதாவாகும். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல் முறை மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
அதாவது பேரழிவுகளைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 10 மீ. உயரம் கொண்ட குறிப்பிட்ட வடிவமைப்பு மற்றும் அமைப்பியல் நிலைமைகள் உள்ள அணைகளுக்கு இந்த மசோதா பொருந்தும்.
2019 மக்களவையில் நிறைவேற்றம்
இந்த மசோதா பல முறை மக்களவை தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகள் எதிர்பால் தள்ளச்சென்றது. பின்னர் கடும் அமளிக்கு இடையே, மக்களவையில் 2019இல் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாவின் பரந்த உட்குறிப்பு காரணமாக, இதனை தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. ஆனால், கோரிக்கையை ஏற்கும் மனநிலையில் மத்திய அரசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தின் அதிமுக அவைத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறுகையில், அணை பாதுகாப்பு மசோதா மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் இந்த மசோதாவுக்கு தனது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தார். "இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்றார்.
இதற்கிடையில், அணை பாதுகாப்பு மசோதா 2019ஐ மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மாநிலங்களவையின் பொதுச் செயலாளருக்கு திமுக எம்.பி திருச்சி சிவா நோட்டீல் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த மசோதாவில் குறிப்பிட்ட அணையின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை அணை உடைப்பு தொடர்பான பேரிடர்களைத் தடுப்பதற்கும், அவற்றின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் வழங்குகிறது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்ப்பு ஏன்?
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் அமைந்துள்ளன, ஆனால் அவற்றை இயக்கும் மற்றும் பராமரிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. இந்த மசோதா அமலுக்கு வரும் பட்சத்தில், 4 அணைகள் குறித்த தகவலை கேரளாவிடம் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்துகிறது.
மேலும், அணை பாதுகாப்புக்கான தேசியக் குழுவை இந்த மசோதா வழங்குகிறது. அந்த குழு செயல்பாடுகளில் அணை பாதுகாப்பு தரநிலைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை அடங்கும். எனவே, அரசியல் சாசனம் புனிதமாக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இந்த மசோதா எதிரானது என்று கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil