மத்திய அரசு 2024-25 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்து பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டட்தொடரில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க எம்.பி.க்கள், ஆ. ராசா, டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோர், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி, வெள்ளா நிவாரண நிதி தரவில்லை, என்றும் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது என்றும் விமர்சித்துப் பேசினார்கள்.
இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கூறினார். “நாட்டில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால், இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழக மக்கள் இளித்தவாயர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?
தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.
ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து காலை 10.15 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம். #FascistBJP #DMK #VCK pic.twitter.com/cMcD2VQWfe
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 8, 2024
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பி.க்கள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், வி.சி.க தலைவர் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் உட்பட தி.மு.க கூட்டணிக் கட்சி எம்பி.க்கள் கருப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தி.மு.க கூட்டணியின் மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.