/indian-express-tamil/media/media_files/t5UnZm9N1jTffiOr2wyM.jpg)
மதுரை மாநகராட்சி மண்டல தி.மு.க தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் ஆதரவாளராகவும் இருந்தவர் வி.கே குருசாமி(64). இவர் கடந்த செப்.4-ம் தேதி அன்று பெங்களூரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது போட்டி கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கம்மனஹள்ளியில் உள்ள ஒரு ஹோட்டலில் குருசாமி அவரது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து அவர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. அவர் உடலில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி தாக்கியது.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பானஸ்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் மதுரையைச் சேர்ந்த ரவுடி பாண்டியன் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் கார்த்திக், வினோத்குமார், பிரசன்னா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குருசாமி மதுரையில் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். இவர் மீது தமிழக காவல்துறையில் 8 கொலை, 7 கொலை முயற்சி உள்பட 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவருக்கும் மற்றொரு ரவுடி
கும்பலுக்கும் இடையே 30 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இது நடந்திருக்கலாம் எனக் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.