நாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே ஏன்கொன்றார் என்பது பற்றி கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டியதற்கு பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சிறப்பு பாதுகாப்பு குழு திருத்த மசோதா தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, திமுக தலைவர் ஆ.ராசா, நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை ஏன் கொன்றார் என்பது குறித்து நாதுராம் கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டினார். காந்திக்கு எதிராக 32 ஆண்டுகளாக வெறுப்பை வளர்த்ததாக கோட்சே ஒப்புக்கொண்டதாகவும், ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை நம்பியதால் அவரைக் கொன்றதாகவும் ஆ.ராசா கூறினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூரிடமிருந்து கோபமான எதிர்வினை வெளிப்பட்டது. இருப்பினும், பிரக்யா சிங் தாக்கூரின் எதிர்வினைப் பேச்சு அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படவில்லை.
பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, பாஜக உறுப்பினர்களிடம் தாக்கூரை அமர வைக்குமாறு அறிவுறுத்தினர்.
பின்னர், அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாஜக எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் “நாளைக்கு பதில் அளிப்பேன்” என்று கூறினார்.
இந்த ஆண்டு மே மாதம், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாக்கூர் கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று குறிப்பிட்டார். அது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோட்ஸே “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி” என்று கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலளித்த பிரக்யா சிங் தாக்கூர், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் ஒரு தேசபக்தராகவே இருப்பார். அவரை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பவர்கள் அதற்குள்ளாக பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும்” என்று கூறினார்.
பிரக்யா சிங் தாக்கூரின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டார். அப்போது, அவரது பேச்சு முற்றிலும் தவறாக குறிப்பிடப்பட்டுவிட்டது என்றும் மகாத்மா காந்தி மீது அவருக்கு மரியாதை இருப்பதாகவும் கூறினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அப்போது “பாபுவை அவமதித்ததற்காக பிரக்யா சிங் தாக்கூரை ஒருபோதும் முழுமையாக மன்னிக்க முடியாது” என்று கூறினார்.
“காந்திஜி அல்லது நாதுராம் கோட்சே பற்றி கூறப்பட்ட கருத்துகள் சமூகத்திற்கு மிகவும் மோசமானது. மிகவும் தவறானது.. அவர் மன்னிப்பு கோரியிருந்தாலும், என்னால் ஒருபோதும் அவரை முழுமையாக மன்னிக்க முடியாது” என்று பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.