நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாள்தோறும் விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி அப்துல்லா பழமொழி கூறி உரை தொடங்கினார்.
அப்போது பழமொழி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.பி அப்துல்லா இடையே சுவாரஸ்ய விவாதம் ஏற்பட்டது. அப்துல்லா கூறுகையில், 'ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்க கழுதை மேய்க்க' என்ற பழமொழியை மேற்கோள் காட்டி உரையை தொடங்கினார். அப்போது நிதியமைச்சர் சீதாராமன் "கழுதையில்லை ஆடு தான்" என்றார். இதற்கு அப்துல்லா "திருச்சியில் ஆடாக இருக்கும். புதுக்கோட்டையில் கழுதை. ஊருக்கு ஊரு மாறும்" என்று பதிலளித்தார். உடனே சீதாராமன், "அதெல்லாம் ஊருக்கு ஊர் மாறாது ஆடுதான்" என்று கூறினார். இது மாநிலங்களவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அப்துல்லா, "2014, 2019-ம் ஆண்டு இந்த மத்திய அரசு அமைந்த போது மக்களின் எதிர்பார்ப்பு ஒரு சிறப்பான அரசாங்கம் அமைய வேண்டும் என்பது தான். ஆனால் கடைசியில் மக்களுக்கு கிடைத்தது அமேசான் அரசாங்கம், எல்லா துறைகளையும் விற்பனை செய்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
2016-யை வட 2022 டிசம்பர் இறுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என தரவு கூறுகிறது. மத்திய அரசிடம் எவ்வித முன்னேற்ற திட்டமும் இல்லை. சமத்துவமின்மை, பணவீக்கம் உள்ளது. பணக்காரர்களுக்கான பட்ஜெட் ஆக உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமான நிலையில் உள்ள போது 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/