2020-21ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியைவிட அதன் கூட்டணியில் உள்ள மாநில கட்சியான திமுக அதிக அளவு செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
2020-21ஆம் ஆண்டில் கட்சியின் செலவு ரூ.209 கோடி என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அதே ஆண்டு திமுக கட்சியின் மொத்தச் செலவு ரூ.218.49 கோடி என்று அறிவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட மொத்த செலவினங்களின் அடிப்படையில், மத்தியில் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சியான திமுகவை விட பின்தங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான தேசிய அளவிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ.285.76 கோடியாக இருந்தது. அதே ஆண்டில், திமுகவின் வருவாய் சுமார் ரூ.150 கோடிக்கு மேல் இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் 2020-21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, ஏப்ரல் 7-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியின் மொத்த நிதி வருவாய் ரூ 285.76 கோடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிதி வருவாய், 2019-20 இல் ரூ 682.21 கோடியாக இருந்தது. இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் வருவாயில் 58% சரிவைக் கண்டுள்ளது தெரிகிறது. 2020-21ல் காங்கிரஸ் கட்சியின் செலவு 2019-20ல் இருந்த ரூ.998 கோடியிலிருந்து 2020-21ல் ரூ.209 கோடியாக குறைந்து கிட்டத்தட்ட 79% சரிந்துள்ளது.
பீகாரில் 2020ல் சட்டசபை தேர்தல் நடந்தது, அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு 2021 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
2020-21-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் கருவூலத்திற்கு வந்த ரூ.285.76 கோடி வருவாயில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.10 கோடிக்கு சற்று அதிகமாகவே வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த வருவாய், 2019-20 பொதுத் தேர்தல் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ஈட்டப்பட்ட ரூ.317.86 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு வந்த நிதி வருவாயில் கூப்பன்கள் மூலம் மிகப் பெரிய பங்களிப்பு கிடைத்துள்ளது. அது சுமார் ரூ. 157 கோடி பெற்றுள்ளது. இது 2019-20-ம் ஆண்டில் பெற்ற ரூ. 192 கோடியைவிட குறைவு ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ரூ. 48.57 கோடியும், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் ரூ. 24.46 கோடியும், தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.7.35 கோடியும் நன்கொடை அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மொத்த தேர்தல் செலவு 2019-20-ம் ஆண்டில் ரூ.864 கோடியிலிருந்து 2020-21ம் ஆண்டில் 89% சரிந்து ரூ.91.3 கோடியாக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகச் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைவு எதுவும் இல்லை. 2019-20-ம் ஆண்டில் ரூ. 4 கோடியிலிருந்த சமூக ஊடகச் செலவு 2020-21-ல் ரூ.3.85 கோடியாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.