தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும் இதனால் அச்சமடைந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு செல்வதாகவும் கூறி வீடியோ பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் பரவியது போலி வீடியோ என்றும் தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் போலி வீடியோ பரப்பியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பீகார் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக தி.மு.கவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை (செவ்வாய்கிழமை) நேரில் சந்தித்துப் பேசினார்.
100-வது பிறந்தநாள் விழா
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய டி.ஆர்.பாலு, "புலம்பெயர்ந்தோர் பிரச்சினை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் நேரில் சென்று விளக்கினேன். இது குறித்து ஏற்கனவே ஒரு நிலை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றியும் அவரிடம் விளக்கி கூறினேன்" என்றார்.
டி.ஆர்.பாலு உடனான சந்திப்பு குறித்து நிதிஷ்குமார் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், ஜே.டி.யூ மூத்த தலைவரும், நிதியமைச்சருமான விஜய் குமார் சவுத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த மு. கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு அழைப்பதற்காக பாலு வந்தார்" என்று கூறினார்.
தொடர்ந்து, அவர் தமிழ்நாட்டிலிருந்து ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியை எடுத்து வந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று வெளியான 2 வீடியோக்கள் போலியாவை என காவல்துறையினரால் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூறினார். தொழிலாளர்கள் பற்றிய விவாதம் இயற்கையாகவே வந்தது என்று சவுத்ரி கூறினார்.
சதி செயல்
தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என்று பாலு கூறினார். பீகார் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் ஆழமான சதியின் ஒரு பகுதியாக சமீபத்திய நிகழ்வுகள் இருப்பதாக அவர் கூறினார்.
ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரு தளத்தை வழங்கக்கூடும் என்றும் தேசிய எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான நிதிஷ் குமாரின் முயற்சிகள் முறையாக தொடங்கப்படும் என்றும் ஜேடியூ வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக அல்லாத கட்சிகளைச் சேர்ந்த அனைத்து உயர்மட்டத் தலைவர்களையும் திமுக அழைத்திருப்பதால், தேசிய எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், ஏப்ரல் மாதத்திற்குப் பின் தேசிய எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன் என நிதிஷ் குமார் ஏற்கனவே கூறியிருக்கிறார், தமிழ்நாட்டிற்கு நிதிஷின் வருகை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.