டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை தகவலை மாநில அரசு மறைக்க முயல்கிறது என தனது பேஸ்புக்கில் பதிவிட்ட மருத்துவர் ஒருவரை மேற்குவங்க சுகாதாரத் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
அருணாச்சல் தத்தா சௌத்ரி என்கிற அந்த அரசு மருத்துவர், தனது பேஸ்புக்கில் இந்த கருத்தை பதிவிட்டதற்காக, "பொதுமக்களுக்கு தவறான விளக்கம் அளித்தார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவமானம் பெற்றுத் தந்தார்" என்று காரணம் கூறி, அவரை சுகாதாரத்துறை துறை சஸ்பென்ட் செய்துள்ளது.
மேலும் அந்த மருத்துவர் தனது பேஸ்புக்கில், கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி 500 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தான் சிகிச்சை அளிக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதிய இடமில்லாமல், நிறைய நோயாளிகள் தரையிலேயே படுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறையின் அறிக்கைப் படி, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து, மாநில அரசு மருத்துவமனையில் இதுவரை 19 நோயாளிகள் பலியாகி இருப்பதாகவும், 18,000 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் டெங்குவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, டெங்குவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பை தடுக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.