மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவரது வயிற்றிலிருந்து சுமார் 5 கிலோ கொண்ட உலோகங்களை மருத்துவர்கள் அகற்றினர்.
மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்திலுள்ள சோஹாவால் பகுதியை சேர்ந்தவர் முகமது மக்சூத் (வயது 32). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி, சஞ்சய் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனைகளின் முடிவில், அவரது வயிற்றில் நாணயங்கள், ஊசிகள், பிளேடுகள், செயின்கள் உள்ளிட்ட உலோகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அந்த உலோகங்களை அகற்றினர். அவற்றில், சுமார் சங்கிலி, 263 நாணயங்கள், 10-12 பிளேடுகள் உள்ளிட்டவை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முகமது மக்சூத் சரியான மனநிலையில் இல்லாதவர் என்பதால், இப்பொருட்களை அவர் ரகசியமாக உட்கொண்டு வந்திருக்கலாம் எனவும், தற்போது அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.