பொதுமக்களை அலைகழிக்கும் பத்திரப்பதிவு துறையை கண்டித்து, பத்திர எழுத்தர்கள் கடைகளை அடைத்து பத்திர பதிவு துறை முன்பு திங்கள்கிழமை (டிசம்பர் 16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரியில் உழவர்கரை, பாகூர், வில்லியனூர்,சாரம், திருக்கனூர் ஆகிய 5 இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இங்கு பணிகள் காலதாமதம் செய்வதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. இணையதள குளறுபடி என காரணம் கூறி பத்திரங்களை உடனடியாக பதிவு செய்யாமல், பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், புதிய பதிவாளர்களை நியமித்துள்ளதால் அனுபவம் குறைவு என்பதால், எளிதில் கையாள வேண்டிய பதிவுகளை சிக்கலாக்கி தாமதப்படுத்துகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சாரம் பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு பிற பகுதிகளில் உள்ள பத்திர எழுத்தர்கள் தங்கள் கடைகளை அடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர்.
திருமணத்தை பதிவு செய்ய வருபவர்களை பல நாட்கள் இழுத்தடிப்பதால் அவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பத்திரப்பதிரவு எழுத்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்தகாலத்தில் ஒரு நாளைக்கு 5 பதிவாளர் அலுவலகத்திலும் 500-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஒவ்வொரு அலுவலகத்திலும் 4, 5 பத்திரங்களே பதிவு செய்யப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் பாதிக்கப்படுவதோடு, பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
சார் பதிவாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். 2, 3 துறைக்கு சேர்த்து வேலை செய்கின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.
இணையதள வசதியும் மேம்படுத்தவில்லை. இதனால் பத்திரம் பதிவு செய்யும்போது சர்வர்கள் நின்றுவிடுகிறது. திருமணப்பதிவு, உயில் பத்திரங்கள் பதிவு செய்ய முடியவில்லை. முதியோர், பொதுமக்களை அலைக்கழிப்பதால் பதிவை கைவிட்டு செல்கின்றனர்.
ஆண்டுக்கு 40 ஆயிரம் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆண்டுக்கு ஆயிரம் பத்திரம்தான் பதிவு செய்யப்படுகிறது. பல முறை எடுத்துக்கூறியும் இதை சீர் செய்யவில்லை. அரசுக்கு பெரும் வருவாய் தரக்கூடிய பத்திரப்பதிவுத்துறை அலட்சியமாக செயல்படுகிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம்.மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவும் அளிக்க உள்ளோம்” என பத்திர எழுத்தர் சங்கம் தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“