அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து மணிசங்கர் ஐயர் கூறியதாவது,
''ராஜீவ் காந்தி பிரதமரான போது, அவர் ஒரு விமானி என்றுதான் நான் உள்பட மக்கள் நினைத்தனர். ஆனால், அவர் இரண்டு முறை பெயில் ஆனவர். அவரோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நானும் படித்தேன். சுலபமாக தேர்ச்சி பெறக்கூடிய பாடத்தில் கூட அவர் பெயில் ஆனார். அதன் பின்னர், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் அவர் சேர்ந்தார். ஆனால், அங்கும் அவர் பெயில் ஆனார். 2 முறை பெயில் ஆன ஒருவர் எப்படி பிரதமராக முடியும் என்று நான் யோசித்தேன்'' என்றார்.
ராஜீவ் காந்தி கல்லூரியில் தோல்வியடைந்தது குறித்து பேசியதன் மூலம், காங்கிரஸ் கட்சி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளார் மணிசங்கர் ஐயர். அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர். மணி சங்கர் அய்யர் பேசிய வீடியோவை பாஜக தலைவர்கள் எக்ஸ்தளத்தில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
ஒரு வகையில், காங்கிரசின் தொடர் தோல்விக்கு, மணிசங்கரும் ஒரு காரணம் என்கின்றனர் காங்கிரசார். 'மணி ஒரு உளறுவாயர்... இவருடைய கமென்ட்களால்தான் மோடி வளர்ந்துவிட்டார்' என, இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'மோடி டீ விற்பவர்' என, கிண்டல் செய்தார் மணிசங்கர். அதை, மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்து வெற்றி பெற்றார் மோடி. பின்னர் 2017-ல், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது, 'மோடி கீழ்த்தரமானவர்' என, விமர்சித்தார். 'குஜராத்திகளை கேவலப்படுத்திவிட்டது காங்கிரஸ்' என, மோடி பிரசாரம் செய்ய, அங்கு மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இதனிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பகுதியினர் "பா.ஜ.க.,வுடன் சூழ்ச்சி செய்கிறார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம் சாட்டினார், மேலும் தேவைப்பட்டால் "20 முதல் 30 பேரை" நீக்கவும் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். குஜராத்தில் காங்கிரஸின் மறுமலர்ச்சி "இரண்டு - மூன்று ஆண்டு திட்டம் அல்ல, 50 ஆண்டு திட்டம்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி கூறினார்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் எதிர்கொண்ட ஒன்றுதான் இந்த பிரச்னை. வி.பி. சிங், ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளில் சேருவதா? அல்லது அவர்கள் உருவாக்கிய அடித்தள எழுச்சியைக் கருத்தில் கொண்டு புதிய கட்சியை உருவாக்குவதா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
நிச்சயமாக பாஜகவின் ஸ்லீப்பர் செல்லில் உறுப்பினராக மணிசங்கர் ஐயர் இருக்க மாட்டார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் அவர் எவ்வளவு திட்டப்பட்டாலும் பரவாயில்லை. நிச்சயமாக, காங்கிரஸ் அவரைப் போன்ற தலைவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மணிசங்கர் ஐயர் போன்ற சில மேதாவிகள் இல்லாமல் இந்திய அரசியல் நிச்சயமாக மந்தமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.