/indian-express-tamil/media/media_files/2025/03/24/bqgFIHh70sZZpVcHNUZK.jpg)
போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
பக்தர்கள் போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவி சங்கமித்ரா. இவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருந்தார். அவரை மதனதீபுபாபு என்ற சந்தீப், பவன்குமார் ஆகியோர் தொடர்பு கொண்டு சுப்ரபாத சேவை, வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை வசூலித்து மோசடி செய்தனர். இந்தச் சம்பவம் மார்ச் மாதம் நடந்தது. அதிர்ச்சி அடைந்த மாணவி சங்கமித்ரா உடனே திருமலை 2-டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.
இடைத்தரகர்கள் சாமி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுத்தருகிறோம் எனக் கூறி பக்தர்களிடம் அதிக தொகையை வசூலிக்கின்றனர். இதுபோன்றவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு கண்காணிப்புக் குழுவை நியமித்துள்ளது. பக்தர்கள் இடைத் தரகர்களை நம்பாமல் அதிகாரப்பூர்வ வழியாகவே சாமி தரிசன டிக்கெட்டுகளைப் பெற வேண்டும். பக்தர்கள் போலி தரிசன டிக்கெட்டுகளை பெற்று ஏமாற வேண்டாம்.
பக்தர்கள் பெற்ற தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான பறக்கும்படை ஊழியர்கள் சரிபார்ப்பார்கள். அப்போது போலி தரிசன டிக்கெட்டுகளாக இருந்தால், தரிசனத்தில் இடையூறு ஏற்படலாம். யாரேனும் உங்களை அழைத்து வந்து சாமி தரிசனம், தங்குமிடம் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகக் கூறினால் நம்ப வேண்டாம். உடனே 0877-2263828 என்ற எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பக்தர்கள் தங்கள் ஆதார் கார்டின் அடிப்படையில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ttdevasthanams.ap.gov.in மூலமாகவே தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இது, பக்தர்களை போலி டிக்கெட்டுகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க முக்கியமான எச்சரிக்கையாக அமைகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.