அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள்கள் பயணமாக சென்றிருந்தார். ராஜ்கோட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “பாஜக தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகாமல், ஆம் ஆத்மிக்கு பணி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்துக்கு இரு நாள்கள் பயணமாக சென்றுள்ளார்.
அங்கு சனிக்கிழமை (செப்.3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகாமல், ஆத் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு உள்ளடி அரசியலில் ஈடுபட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “எங்களுக்கு பாரதிய ஜனதா தலைவர்கள் வேண்டாம். பாஜக தனது தலைவர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் கிராமங்கள் முதல் தாலுகா, மாவட்டம் வரை பாஜக தொண்டர்கள் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பாஜக என்ன செய்தது? நான் இதை அவர்களிடமே கேட்க விரும்புகிறேன்.
மேலும் பாரதிய ஜனதா அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நல்ல கல்வி, சுகாதாரம் மற்றும் இலவச மின்சாரம் ஆகியவற்றை வழங்கவில்லை. ஆனால் ஆம் ஆத்மி மக்களின் நலனில் அக்கறை செலுத்தும். உங்களிடம் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் பாரதிய ஜனதா கட்சியிலேயே தொடருங்கள். ஆனால் ஆம் ஆத்மிக்கு வேலை செய்யுங்கள். பணத்தை அங்கிருந்து பெற்றுக் கொண்டு, பணம் இல்லாத ஆம் ஆத்மி கட்சிக்காக வேலை செய்யுங்கள்.
நாங்கள் ஆட்சி அமைக்கும்போது இலவச மின்சாரம் வழங்குவோம். இந்த 24 மணி நேர இலவச மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கும். உங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் மடிக்கணினி வழங்குவோம்.
நீங்கள் 27 வருடம் பாரதிய ஜனதாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளீர்கள். இனியும் அந்தக் கட்சிக்கு வெற்றியை தேடி கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்றார்.
மேலும் சமீபத்தில் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் சோரத்தியா (Manoj Sorathiya) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கெஜ்ரிவால், “இது போன்ற தாக்குதல்கள் வருங்காலத்தில் குஜராத்தியர்கள் மீதும் நடத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து, குஜராத் மாநில அரசு விவசாயிகளின் வாழ்வியலில் அக்கறை செலுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.