ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாநில அரசின் கூற்றுப்படி, ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது.
கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், " மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது" குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலில் உடுப்பி, சிக்மகளூருவில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil