சந்திரன்.
தென்னகத்தின் இருமுக்கிய தொழில் நகரங்களான பெங்களூரு மற்றும் கோயம்முத்தூர் இடையே புதிய ரயில் சேவை தொடங்க உள்ளது. உதய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தொடங்க உள்ள இது, இரண்டு அடுக்கு பெட்டிகள் கொண்ட ஏசி வசதியுள்ள ரயில் சேவை. இதற்கான சிறப்பு ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த இரண்டடுக்கு பெட்டிகளில் பல மாற்றங்களைச் செய்து இந்த புதிய ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. வெளிபுறத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணத்தின் கலவையாக அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டியின் மீது - மற்ற ரயில் பெட்டிகளின் மீது வரையப்படும் ஓவியங்கள், எழுதப்படும் அரசியல் வாசகங்கள் என்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை.
உள்புறமும் கூட இதேபோல, கிறுக்கல்களை தவிர்க்க, பவுடர் கோட்டிங் முறையால் சீர்திருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 4 பெட்டிகளில் உணவக வசதி இடம் பெற்றிருக்கும். 2 பெட்டிகள் ரயில் இயக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு தேவையான மின் உற்பத்தி சாதனங்களைக் கொண்டிருக்கும்.
இதர 8 பெட்டிகள் முழுமையாக பயணிகளின் பயன்பாட்டுக்கு உதவும். இதில் உணவகம் உள்ள பெட்டிகளில் 104 பயணிகளும், மற்ற பெட்டிகளில் 120 பயணிகளும் செல்ல முடியும். மற்றபடி பயணிகள் எதிர்பார்க்கும் அனைத்து நவீன வசதிகளும், கழிவறை உள்ளிட்ட அனைத்திலும் பயோ டாய்லெட் பொறுத்த உதவும் சாதனங்களுடன் இந்த ரயில் உருவாகியுள்ளது.
திங்கட்கிழமை தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும், பயண சேவை அளிக்க உள்ள இந்த உதய் எக்ஸ்பிரஸ் மாலை 2.15க்கு பெங்களூருவில் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு - ஆறே முக்கால் மணி நேரத்தில் கோவையை அடையும். மாறாக, கோவையில் இருந்து மாலை 5.40க்கு புறப்படும் ரயில், இரவு 12.40க்கு... அதாவது 7 மணி நேர பயணத்தில் பெங்களூரு நகரை சென்றடையும்.
இந்த ரயில்கள் இடையில் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 முக்கிய நகரங்களில் மட்டும் நின்று செல்லும் எனவும் இந்திய ரயில்வே கால அட்டவணைத் தகவல் தெரிவிக்கிறது.
தற்போது ஏசி வசதி இருக்கை கண்ட ரயில்களில் உள்ள கட்டணமே இந்த ரயிலின் கட்டணமாக இருக்கும் எனச் சொல்லப்பட்டாலும், இது குறித்த தகவலை ரயில்வே துறை இன்னும் முறையாக அறிவிக்கவில்லை.
இந்த உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முதல் வரிசை பெங்களூரு கோவை இடையே பயணித்தாலும், அடுத்து மும்பை ஜாம்நகர் இடையேயும், விஜயவாடா விசாகப்பட்டிணம் இடையேயும் கூட அடுத்தடுத்த கட்டங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சென்னை பெங்களூரு இடையே செல்லும் இரண்டடுக்கு ஏசி ரயில் ஐடி துறை ஊழியர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்போது புதியதாக உதய் என்ற பெயரிடப்பட்டு தொடங்கும் ரயில்களும் வரவேற்பு பெறும் என நம்பலாம்.